பிற விளையாட்டு

மின்னல் வேக ‘தமிழச்சி’ + "||" + Lightning speed Tamilachi

மின்னல் வேக ‘தமிழச்சி’

மின்னல் வேக ‘தமிழச்சி’
தமிழகத்தை சேர்ந்த தனலட்சுமிதான், இந்திய தடகள உலகின் புதிய பேசுப்பொருள். ஏனெனில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த தேசிய பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் இவர் புதுமையான சாதனைகளை படைத்திருக்கிறார்.
100 மீட்டர் தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்து, இந்தியாவின் முன்னணி வீராங்கனை டூட்டி சந்தை (11.58 விநாடிகள்) முந்தினார். இதேபோல 200 மீட்டர் ஓட்டத்தில் போட்டி தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர், 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

`மின்னல் வேக தமிழச்சி' என்ற பெருமையோடு தமிழகம் திரும்பிய தனலட்சுமியை சந்தித்து பேசினோம். அவர் பகிர்ந்து கொண்டவை இதோ...

உங்களை பற்றி கூறுங்கள்?

திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதிதான் என் சொந்த ஊர். அப்பா சேகர். அம்மா உஷா. காயத்ரி மற்றும் கஸ்தூரி என்ற இரு சகோதரிகள். நான் கடைசி பெண். பி.ஏ. தமிழ் முடித்திருக்கிறேன். தற்போது முதுகலை பட்டப்படிப்பும் மேற்கொண் டிருக்கிறேன்.

ஓட்டப்பந்தய வீராங்கனையாக உணர்ந்தது எப்போது?

9-ம் வகுப்பு படிக்கையில், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆரோக்கியராஜ் எனக்குள் இருந்த ஓட்டத்திறனை கண்டுபிடித்து, அதை முறையாக வெளிக்கொணர்ந்தார். அவரது அறிவுரைப்படி மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டேன். வெற்றி கிடைத்தது. முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்ததால், தொடர்ந்து ஓட ஆரம்பித்தேன். கல்லூரி சேர்க்கைக்குள் பலதரப்பட்ட போட்டிகளில் ஓடி, பல பதக்கங்களை வீட்டில் சேர்த்திருந்தேன்.

ஓட்டப்பந்தய வாழ்க்கையில் தீவிரம் காட்டியது எப்போது?

கல்லூரியில் சேர்ந்த பிறகுதான், ஓட்டப்பந்தய வாழ்க்கையை சிறப்பாக கட்டமைத்தேன். கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் வரை எந்தவித சிறப்பு பயிற்சியும் இன்றி, ஓட்டப்பந்தய போட்டிகளுக்கு என்னை நானே தயார்படுத்தி கொள்வேன். போட்டிக்கு முந்தைய நாளில், ஒருசில பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டு நேரடியாகவே பந்தயத்திற்கு சென்றுவிடுவேன். அதனால் கல்லூரி வாழ்க்கையின் தொடக்கத்தில் பல தோல்விகளை சந்திக்க நேர்ந்தது. அப்போதுதான், என் உறவினர் கார்த்தி அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகளாக ஓட்டப்பந்தய போட்டிகளில் பதக்கம் வென்றுவரும், மணிகண்ட ஆறுமுகத்தை சந்தித்தேன். இவர் ரெயில்வே துறையில் வேலை பார்க்கிறார். ஓட்டப்பந்தய போட்டிகளிலும் பங்கேற்று பரிசு வெல்கிறார். இவரிடம் பயிற்சி பெற தொடங்கியதில் இருந்துதான், ஓட்டப்பந்தய வாழ்க்கை புதுவேகம் எடுத்தது.

ஆரம்பக்கட்ட பயிற்சிகள் எப்படி இருந்தன?

சுயமாகவே பயிற்சி மேற்கொள்வதற்கும், பயிற்சியாளரிடம் முறையான பயிற்சி பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. காலையில் மூன்று மணிநேர பயிற்சி, மாலையில் மூன்று மணிநேர பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றால், ஓட்டத்திறனும், உடல் ஆரோக்கியமும் மெருகேறியது. தன்னம்பிக்கையும் கூடியது. பரிசுகளும் குவிந்தது.

உந்துதல் தந்த வெற்றி எது?

2018-ம் ஆண்டு தேசிய அளவில் நடந்த போட்டியில் பங்கேற்று 200 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றேன். என் வாழ்வின் நெகிழ்ச்சியான தருணம் என அதைத்தான் சொல்வேன். எனக்கு உந்துதல் தந்த வெற்றியும் அதுவே. அந்த வெற்றி தந்த பொறுப்பை உணர்ந்துதான், ஒலிம்பிக் போட்டியில் நான் இந்தியாவுக்காக ஓட வேண்டும் என்கிற இலக்கு ஏற்பட்டது. அதற்காகவே பயிற்சி பெறுகிறேன். ஓடிக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தொடங்கியதும், என்னோடு முன்னணி வீராங்கனைகள் போட்டிக்களத்தை பகிர்ந்து கொண்டனர். ஹீமா தாஸ், டூட்டி சந்த் போன்ற மின்னல் வேக வீராங்கனைகளுக்கும் ஈடுக்கொடுத்து ஓட வேண்டி யிருந்தது. அதனால் பல தோல்விகளை சந்தித்து, பலரது விமர்சனத்திற்கும் ஆளானேன்.

‘அவர்களோடு ஓடி உன்னால் ஜெயிக்க முடியாது. அதனால் பயிற்சியையும், முயற்சியையும் விட்டுவிடு’ போன்ற அறிவுரைகள் ஏராளமாய் வந்தன. இருப்பினும் என் முயற்சியை விட்டுவிடவில்லை. அவர்களுக்கு இணையாக ஓடி, இன்று அவர்களை விடவும் வேகமாக ஓடியிருக்கிறேன்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளோடு ஓடி, வெற்றி பெற்றதை பற்றி கூறுங்கள்?

2019-ம் வருடம் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் நான் வெண்கலப் பதக்கம் பெற்றேன். அப்போது தங்கப் பதக்கம் பெற்றவர் டூட்டி சந்த். அடுத்த போட்டியில் அவரைவிட வேகமாக ஓட வேண்டும் என மனதில் வைராக்கியம் எழுந்தது. அதற்காக நிறைய பயிற்சிகள் செய்தேன். என் முயற்சிக்கும், பயிற்சிக்குமான பரிசாகதான் இந்த வெற்றி கிடைத்தது.

ஆனால், பி.டி.உஷாவின் சாதனையை 23 வருடம் கழித்து முறியடிப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 200 மீ. ஓட்டப்பந்தயத்தின் தகுதிச் சுற்றை 23.26 நொடிகளில் நிறைவு செய்து, 23 வருடத்திற்கு முந்தைய பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்தபோது, அது கனவா நனவா போன்று இருந்தது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி பெற்றும், சாதனை நிகழ்த்தியும், ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல நான் தேர்வாகவில்லை என்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. என் இலக்குகளை இன்னும் பெரிதாக்கியிருக்கிறேன். அதை அடைவதே என் குறிக்கோள்.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பற்றி கூறுங்கள்?

அப்பா இறந்துவிட்டார். அம்மாவின் பொறுப்பில்தான் வளர்கிறேன். அதனால் அம்மாவிற்கு நெருக்கடி அதிகம். அம்மா பலரது அறிவுரைகள், வசைப்பாடல்களை கடந்துதான் என்னை ஓட்டப்பயிற்சிக்கு அனுப்புகிறார். ஆரம்பத்தில் அம்மாவிற்கும் ஓட்டப்பந்தய வாழ்க்கை பிடிக்கவில்லை. பிறகு என்னுடைய வெற்றிகளும், பதக்கங்களும் அவரை சமாதானப்படுத்தி, சம்மதிக்க வைத்தன.

ஓட்டப்பயிற்சி பெறுகையில், உடலை வலுப்படுத்த நிறைய இறைச்சி உணவுகளை சேர்க்கவேண்டி இருந்தது. பால்-பழங்கள், பருப்புகள் போன்றவற்றையும் அதிகமாக சாப்பிடவேண்டி இருந்தது. என்னுடைய குடும்ப சூழ்நிலைக்கு இவை எல்லாம் ஆடம்பர பொருட்கள். அதுவும் தினமும் வாங்கி சாப்பிடுவது என்பதெல்லாம், நடக்காத காரியங்கள். இருப்பினும் அம்மாவின் கரிசனத்தால், அவை எனக்கு கிடைத்தன. அதனால்தான், மின்னல் வேக தமிழச்சியாக இன்று அறியப்படுகிறேன்.