கடைசி நாளில் மேலும் 2 தங்கம் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா 30 பதக்கங்கள் குவித்து முதலிடம்


கடைசி நாளில் மேலும் 2 தங்கம் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா 30 பதக்கங்கள் குவித்து முதலிடம்
x
தினத்தந்தி 29 March 2021 2:25 AM GMT (Updated: 29 March 2021 2:25 AM GMT)

டெல்லியில் நேற்றுடன் நிறைவடைந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி 15 தங்கம் உள்பட 30 பதக்கங்கள் குவித்து முதலிடம் பிடித்தது.

புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 18-ந்தேதி டெல்லியில் தொடங்கியது. 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் முதல் நாளில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வியப்பூட்டினர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கத்தை அள்ளியது.

ஆண்களுக்கான டிராப் அணிகள் பிரிவில் கைனன் செனாய், பிரித்விராஜ் தொண்டைமான், லாக்‌ஷே ஷெரான் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர், மைக்கேல் ஸ்லம்கா, அட்ரியன் டிரோப்னி, பிலிப் மரினோவ் உள்ளிட்டோரை கொண்ட சுலோவக்கியா அணியை சந்தித்தனர். தொடக்கத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கிய இந்தியா அதன் பிறகு 4-4 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது. கடைசி கட்ட ரவுண்டுகளில் இலக்கை துல்லியமாக சுட்ட இந்திய குழுவினர் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தனர். வாகை சூடிய பிரித்விராஜ் தொண்டைமான் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பெண்கள் பிரிவிலும் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது. இதில் ஸ்ரேயாசி சிங், ராஜேஷ்வரி குமாரி, மனிஷா கீர் ஆகியோரை கொண்ட இந்திய அணி 6-0 என்ற கணக்கில் கஜகஸ்தானை சுலபமாக வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. அதே சமயம் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங், விஜய்வீர் சித்து, ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதி சுற்றில் 2-10 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது.

பதக்கப்பட்டியலில் மொத்தம் 22 நாடுகள் இணைந்துள்ளன. இதில் இந்தியா 15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 30 பதக்கங்களுடன் கம்பீரமாக முதலிடத்தை பிடித்தது. உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு இது தான். அமெரிக்கா 8 பதக்கத்துடன் (4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம்) 2-வது இடத்தையும், இத்தாலி 2 தங்கம், 2 வெண்கலம் என்று 4 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றன.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்து மற்ற நாட்டு துப்பாக்கி சுடுதல் சம்மேளனங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக மகிழ்ச்சி தெரிவித்த இந்திய துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் ரனிந்தர் சிங், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணி ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வு செய்யப்படும் என்றும், கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த முறை 2 மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பிரிவில் மொத்தம் 15 இடங்களுக்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story