‘ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 10 பதக்கம் வெல்லும்’ உலக போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் நம்பிக்கை


‘ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 10 பதக்கம் வெல்லும்’ உலக போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் நம்பிக்கை
x
தினத்தந்தி 30 March 2021 7:16 PM GMT (Updated: 30 March 2021 7:16 PM GMT)

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 10 பதக்கம் வெல்லும் என்று நம்புவதாக உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் கூறியுள்ளார்.

சென்னை,

டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 30 பதக்கங்களை வாரி குவித்து முதலிடம் பிடித்தது. இதில் ஆண்கள் ‘டிராப்’ அணிகளுக்கான பிரிவில் பிரித்விராஜ் தொண்டைமான், கைனன் செனாய், லாக்‌ஷே ஷெரான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

தங்கமகுடம் சூடிய வீரர்களில் ஒருவரான பிரித்விராஜ் தொண்டைமான் திருச்சியைச் சேர்ந்தவர் ஆவார். 32 வயதான பிரித்விராஜ் தொண்டைமான் தனது சாதனை குறித்து கூறியதாவது:-

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் எனது முதல் பதக்கம் இதுவாகும். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதிப்போட்டியில் சுலோவக்கியா குழுவினர் கடும் சவால் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் நாங்கள் 2-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தோம். அப்போது எனது வாய்ப்பில் இலக்கை குறிபார்த்து துல்லியமாக சுட்டு 5-க்கு 5 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தேன். அதனால் 4-4 என்று சமநிலையை எட்டினோம். கடைசி வாய்ப்பிலும் நான் முழுமையாக புள்ளிகளை பெற்றேன். இதன் மூலம் குறைந்த வித்தியாசத்தில்(6-4) அவர்களை தோற்கடித்தோம்.

ஒலிம்பிக் வாய்ப்பு

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. ‘டிராப்’ பிரிவில் நாங்கள் நேரடியாக தகுதி பெறவில்லை. ஆனாலும் அடுத்து நடக்க உள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவில் தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இதே போல் அடுத்த ஆண்டு நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டிலும் சாதிப்பதை எதிர்நோக்கி உள்ளேன்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நமது துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் மொத்தம் 15 ‘கோட்டா’க்களை உறுதி செய்துள்ளனர். துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் செயல்பாடு தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த 5-6 உலக கோப்பை போட்டிகளை எடுத்து பார்த்தால் அவற்றில் இந்தியா தான் பதக்கவேட்டையில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. இந்த ஆண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு குறைந்தது 10 பதக்கமாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நான் 2004-ம் ஆண்டில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். 2010-ம் ஆண்டில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு முதல்முறையாக துப்பாக்கி தந்தவர், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தான். நான் இந்த அளவுக்கு முன்னேறியதற்கு அவர் அளித்த ஊக்கமும் முக்கிய காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story