பிற விளையாட்டு

ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு மேலும் 2 தமிழக வீரர்கள் உள்பட 3 பேர் தகுதி + "||" + 3 more people including 2 more Tamil Nadu athletes have qualified for the Olympic sailing competition

ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு மேலும் 2 தமிழக வீரர்கள் உள்பட 3 பேர் தகுதி

ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு மேலும் 2 தமிழக வீரர்கள் உள்பட 3 பேர் தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி ஓமனில் நடந்தது.

இதில் ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் ஒட்டுமொத்தத்தில் 2-வது இடத்தை பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். மராட்டியத்தில் வசிக்கும் 22 வயதான விஷ்ணு தற்போது பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதேபோல் 49 இஆர் கிளாஸ் பிரிவில் இந்தியாவின் கே.சி.கணபதி-வருண் தாக்கர் ஜோடி முதலிடத்தை பிடித்து ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தது. இவர்கள் இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். ஏற்கனவே இந்த போட்டியின் மூலம் இந்திய வீராங்கனை 23 வயதான நேத்ரா குமணன் (சென்னை கல்லூரி மாணவி) லேசர் ரேடியல் பிரிவில் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றதுடன், ஒலிம்பிக் பாய்மரபடகு போட்டியில் அடியெடுத்து வைக்க இருக்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்து இருந்தார்.

ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் இதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் இந்தியா ஒரு பிரிவில் தான் பங்கேற்று இருக்கிறது. இந்த தடவை முதல்முறையாக 3 பிரிவு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்று இருக்கிறது. அத்துடன் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு 4 இந்தியர்கள் தகுதி பெற்று இருப்பதும் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு அதிக அளவில் இந்தியர்கள் தகுதி அடைந்து சாதனை படைத்து இருப்பதற்கு மத்திய விளையாட்டு மந்திரி கிரண் ரிஜிஜூ பாராட்டு தெரிவித்துள்ளார்.

வருண் தாக்கரின் தந்தை அசோக் தாக்கர் கூறுகையில், ‘இந்த விளையாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் வருணுக்கு குறைந்தது ரூ.1½ லட்சம் செலவு செய்கிறேன். இது அதிக செலவு பிடிக்கும் விளையாட்டு. இதற்கான உபகரணங்களின் விலை மிக அதிகம். தினமும் 6 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவார். உழைப்புக்குரிய பலன் கிடைத்துள்ளது. ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்று எனது மகன் தேசத்தை பெருமைப்பட வைத்திருக்கிறார். ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்’ என்றார்.