பிற விளையாட்டு

இலக்கை விரட்டும் மஞ்சுராணி + "||" + Chase the target Manjuraani

இலக்கை விரட்டும் மஞ்சுராணி

இலக்கை விரட்டும் மஞ்சுராணி
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் வீரர் விஜேந்திர சிங் பங்கேற்கும் போட்டிகளை பார்த்து ரசிப்பதோடு வருங்காலத்தில் தானும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக வேண்டுமென்ற கனவையும் வளர்த்துக் கொண்டார்.
அரியானாவில் சிறு கிராமமொன்றில் பிறந்த மஞ்சுராணி, சிறுவயது முதலே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் வீரர் விஜேந்திர சிங் பங்கேற்கும் போட்டிகளை பார்த்து ரசிப்பதோடு வருங்காலத்தில் தானும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக வேண்டுமென்ற கனவையும் வளர்த்துக் கொண்டார். ஆனால் அவரது ஆர்வத்துக்கு குடும்ப பொருளாதாரம் தடையாக இருந்தது. பயிற்சியளிக்க அவரது கிராமத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளர் யாரும் இல்லை. இருந்தாலும் தனது கனவை விட்டுவிட அவர் தயாராக இல்லை, 2010-ம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பால் இவரது தந்தை இறந்து விடவே, அவரது குடும்பத்தில் இருந்த எட்டு உறுப்பினர்களை காப்பாற்ற ஓய்வூதியம் போதுமானதாக இல்லை. தன்னுடைய ஆசையை விட்டுவிட மஞ்சுராணி முடிவு செய்தார். ஆனால் இவரது அம்மா பக்கபலமாக நின்றதோடு, கூடவே உள்ளூர் பயிற்சியாளர் ஒருவர் பயிற்சியளிக்க முன் வந்தார். கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கபடி உள்பட அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சியளித்து வந்த அவரிடம் குத்துச் சண்டையையும், தற்காப்புக் கலையையும் கற்றுக் கொள்ளத் தொடங்கினார் மஞ்சுராணி.

இதுவே குத்துச்சண்டை வீராங்கனையாகும் அவரது கனவுக்கு திறவுகோலாக அமைந்தது. ஆனால் அவரது முயற்சி நிறைவேறுவது அத்தனை சுலபமாக இல்லை. சாகேப் சிங் நார்வால் என்ற பயிற்சியாளர் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லவ்லி புரபஷனல் யூனிவர்சிட்டியில், விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டில் முழு உதவித் தொகையுடன் சேரும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு மற்ற மாணவர்களுடன் சேர்ந்து சுமன் பீரித்கவுர் என்ற பயிற்சியாளர் உதவியுடன் குத்துச்சண்டையில் அடிப்படை பயிற்சிகளில் தேர்ச்சி பெற்று அரியானா சார்பில் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஆனால் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், பஞ்சாப் சார்பில் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியபோது நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. உடனிருந்தவர்கள் கொடுத்த ஆதரவு மேலும் இவருக்கு ஊக்கத்தை அளித்தது.

தற்போது 21 வயதாகும் மஞ்சுராணி ஏற்கனவே 2019-ம் ஆண்டு அனைத்திந்திய பாக்சிங் அசோசியேஷன் மூலம் மகளிர் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்ற அதே ஆண்டு பல்கேரியாவில் நடந்த ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் பாக்சிங் போட்டியிலும் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

‘‘பொதுமுடக்கம் காரணமாக பல இந்திய இளம் விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை இழக்க நேரிட்டிருக்கிறது. தொடர்ந்து பயிற்சி பெற்று 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதுதான் என்னுடைய இலக்காகவும், லட்சியமாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது’’ என்கிறார் மஞ்சுராணி.