சாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகிறது


சாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகிறது
x
தினத்தந்தி 7 May 2021 1:47 AM GMT (Updated: 7 May 2021 1:47 AM GMT)

மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 25-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கோலாலம்பூரில் நடக்கிறது.

கொரோனா அச்சத்தால் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கான விமான சேவைக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதால் இந்திய வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்திய குழுவினர் இந்த போட்டியில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மலேசியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. இந்திய நட்சத்திர வீராங்கனையான தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால், முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அதன் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டால் மட்டுமே டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும் என்ற சூழல் நிலவுகிறது. ஆனால் மலேசிய ஓபனில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருப்பதன் மூலம் இவர்களின் ஒலிம்பிக் கனவு ஏறக்குறைய தகர்ந்து போய் விட்டது என்றே கூறலாம். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் ஜூன் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடக்கிறது. இது தான் ஒலிம்பிக் பேட்மிண்டனுக்கான கடைசி தகுதி சுற்றாகும். அந்த நாட்டு அரசும் கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதால் இந்த போட்டியிலும் இந்தியர்கள் பங்கேற்பது சந்தேகம் தான்.

இந்திய பேட்மிண்டன் தரப்பில் பி.வி.சிந்து, சாய் பிரனீத், இரட்டையர் ஜோடியான சிராக் ஷெட்டி- சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story