பிற விளையாட்டு

துடுப்புபடகு பந்தயத்தில் இந்திய ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி + "||" + Indian pair qualifies for paddle rowing Olympics

துடுப்புபடகு பந்தயத்தில் இந்திய ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

துடுப்புபடகு பந்தயத்தில் இந்திய ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய-ஓசியானா மண்டல துடுப்பு படகு தகுதி சுற்று போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது.

இதில் ஆண்களுக்கான ‘லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்’ பிரிவு பந்தயத்தில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட், அர்விந்த் சிங் ஜோடி 2-வது இடத்தை பிடித்தது. முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய ஜோடி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆண்களுக்கான ‘லைட் வெயிட் சிங்கிள் ஸ்கல்ஸ்’ பிரிவில் 4-வது இடம் பெற்ற இந்திய வீரர் ஜாகர் கான் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துடுப்பு படகு பந்தயத்தில் இந்தியாவில் இருந்து அர்ஜூன் லால்-அர்விந்த் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். அடுத்து இத்தாலியில் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி ஒன்று நடக்க இருந்தாலும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய அணியினர் யாரும் அந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் ராஜஸ்தானை சேர்ந்த 24 வயது ராணுவ வீரரான அர்ஜூன் லால் கூறுகையில் ‘டோக்கியோ ஒலிம்பிக் தொடங்குவதற்கு இன்னும் 80 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் நிலையில் அந்த நாட்டில் நிலவும் சூழ்நிலையை பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கான ஆயத்த கோலாகலம் மிகவும் குறைவாகவே தெரிகிறது. ஊரடங்கு காரணமாக வீதிகள் காலியாகவே இருந்தன. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது எனக்கு திரில்லிங்காக இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். நடக்காவிட்டால் எங்களது 4 ஆண்டு கால உழைப்பு அனைத்தும் வீணாய் போய்விடும். ஆனால் ஒலிம்பிக் போட்டி அரங்கேறினால் அது ஒட்டுமொத்தமாக வித்தியாசமான ஒன்றாக இருக்கும். தகுதி சுற்று போட்டியின் போது கொரோனா தடுப்பு நடைமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டன. போட்டி, பயிற்சி, சாப்பாடு நேரங்கள் தவிர மற்ற சமயங்களில் ஓட்டல் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதியில்லை. இரண்டு நாளுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது’ என்றார்.