ஒலிம்பிக் தொடங்கும் முன்பு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றால் நன்றாக இருக்கும் - ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விருப்பம்


ஒலிம்பிக் தொடங்கும் முன்பு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றால் நன்றாக இருக்கும் - ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா விருப்பம்
x
தினத்தந்தி 12 May 2021 10:03 PM GMT (Updated: 12 May 2021 10:03 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் 23 வயதான இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காணொலி மூலம் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

மும்பை, 

பயிற்சியில் எனது 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறேன். பயிற்சியும் சிறப்பாக போய் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஒலிம்பிக் பதக்க மேடை திட்ட இலக்கு அதிகாரிகளிடம் இது குறித்து பேசி இருக்கிறேன். அவர்கள் தங்களது முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். ஏதாவது ஒரு வகையில் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் 2 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. காயத்தால் 2019-ம் ஆண்டும், கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் இந்த ஆண்டும் வீணாகி விட்டன. போட்டிகளில் பங்கேற்காத பட்சத்தில் பயிற்சியால் என்ன பலன் இருக்கப் போகிறது. எனக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனுபவம் கிடையாது. இது தான் எனக்கு முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். கொரோனா அச்சுறுத்தலால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது. ஆனாலும் நாங்கள் நன்றாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டில் ஈட்டி எறிதலில் 90 மீட்டர் இலக்கை எட்ட முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story