சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து - ஒலிம்பிக் வாய்ப்பை சாய்னா இழக்கிறார்


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து - ஒலிம்பிக் வாய்ப்பை சாய்னா இழக்கிறார்
x
தினத்தந்தி 12 May 2021 10:32 PM GMT (Updated: 12 May 2021 10:32 PM GMT)

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஒலிம்பிக் வாய்ப்பை சாய்னா கிட்டத்தட்ட இழந்து விட்டனர்.

சிங்கப்பூர், 

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்கு அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான கடைசி தகுதி சுற்று இது தான். இந்்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக சிங்கப்பூர் ஓபன் போட்டி ரத்து செய்யப்படுவதாகவும், மாற்றுதேதியில் நடத்தப்படாது என்றும் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஏற்கனவே இந்திய ஓபன், மலேசிய ஓபன் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூர் ஓபனும் கைவிடப்பட்டிருப்பது பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஒலிம்பிக் வாய்ப்பை பெறுவதற்காக இந்த போட்டியில் பங்கேற்று தங்களது தரவரிசையை மேம்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் காத்திருந்தனர். ஆனால் சிங்கப்பூர் ஓபன் ரத்து மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை சாய்னா, ஸ்ரீகாந்த் கிட்டத்தட்ட இழந்து விட்டனர். சாய்னா, 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை இந்தியாவில் இருந்து பேட்மிண்டனில் பி.வி.சிந்து, சாய் பிரனீத் மற்றும் ஆண்கள் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.

Next Story