கொரோனாவால் கணவனை இழந்த இந்திய கபடி வீராங்கனைக்கு விளையாட்டு அமைச்சகம் நிதியுதவி


கொரோனாவால் கணவனை இழந்த இந்திய கபடி வீராங்கனைக்கு விளையாட்டு அமைச்சகம் நிதியுதவி
x
தினத்தந்தி 21 May 2021 9:51 PM GMT (Updated: 21 May 2021 9:51 PM GMT)

கொரோனாவால் கணவனை இழந்த இந்திய கபடி வீராங்கனைக்கு நிதியுதவி வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

2010 மற்றும் 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் கபடி அணியில் அங்கம் வகித்தவர் தேஜஸ்வினி பாய். அர்ஜூனா விருது பெற்றவரான கர்நாடகாவை சேர்ந்த தேஜஸ்வினி பாய், அவரது கணவர் நவீன் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தேஜஸ்வினி பாய் சிகிச்சைக்கு பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார். ஆனால் அவரது கணவர் சிகிச்சை பலனின்றி கடந்த 11-ந் தேதி மரணம் அடைந்தார். கொரோனா பாதிப்புக்கு ஆளானதுடன் கணவனையும் பறிகொடுத்த தேஜஸ்வினி பாய்க்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்பட விளையாட்டு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. இதனை ஏற்று தேஜஸ்வினி பாய்க்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய நல நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து தேஜஸ்வினி பாய் கூறுகையில், ‘எனது கணவருக்கு 30 வயது தான். அவருடைய தந்தை இறந்ததை அடுத்து அதிக அச்சம் அடைந்தார். பயமும், அழுத்தமும் அவரது உயிரை பறித்து விட்டது. இந்த நிதியுதவியை நான் எதிர்பார்க்கவில்லை. விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இந்த உதவியை எனக்கு வழங்க உடனடியாக முடிவு எடுத்து இருக்கின்றன. என்னை போல் பலரும் நிதி பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களுக்கும் முறையான உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். எனது 5 மாத பெண் குழந்தையை பராமரிப்பதுடன், இதில் இருந்து அவளது வருங்கால தேவைக்கு பணமும் முதலீடு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Next Story