துரோணாச்சார்யா விருது பெற்ற முதலாவது குத்துச்சண்டை பயிற்சியாளர் பரத்வாஜ் மரணம்


துரோணாச்சார்யா விருது பெற்ற முதலாவது குத்துச்சண்டை பயிற்சியாளர் பரத்வாஜ் மரணம்
x
தினத்தந்தி 21 May 2021 9:57 PM GMT (Updated: 2021-05-22T03:27:55+05:30)

துரோணாச்சார்யா விருது பெற்ற முதலாவது குத்துச்சண்டை பயிற்சியாளர் பரத்வாஜ் மரணம் அடைந்தார்.

புதுடெல்லி, 

சிறந்த பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் துரோணாச்சார்யா விருது வழங்கும் நடைமுறை 1985-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருதின் அறிமுக ஆண்டில் ஓ.பி.பரத்வாஜ் (குத்துச்சண்டை), பாலச்சந்திர பாஸ்கர் பக்வாத் (மல்யுத்தம்), ஓ.எம்.நம்பியார் (தடகளம்) ஆகியோர் துரோணாச்சார்யா விருதை பெற்றனர். குத்துச்சண்டையில் துரோணாச்சார்யா விருது பெற்ற முதல் பயிற்சியாளர் என்ற பெருமைக்குரிய ஓ.பி.பரத்வாஜ் டெல்லியில் வசித்து வந்தார். வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல் நல பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பரத்வாஜ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணம் அடைந்தார். வயது மூப்பு பிரச்சினை இருந்தாலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அவருடைய மனைவி இறந்த அதிர்ச்சியில் பரத்வாஜ் இருந்து வந்ததாக அவருடைய குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.

82 வயதான பரத்வாஜ் 1968-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை இந்திய குத்துச்சண்டை அணியின் பயிற்சியாளராக இருந்தார். மேலும் இந்திய குத்துச்சண்டை அணியின் தேர்வாளராகவும் பணியாற்றி உள்ளார். அவரது பயிற்சி காலத்தில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, தெற்காசிய விளையாட்டு உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் நிறைய பதக்கம் வென்றுள்ளனர். புனேயில் உள்ள ராணுவ பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியை தொடங்கிய பரத்வாஜ் சர்வீசஸ் அணியின் சிறந்த பயிற்சியாளராகவும் விளங்கினார்.

Next Story