ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டி துபாயில் இன்று தொடக்கம் - பதக்கவேட்டை நடத்துமா இந்தியா?


ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டி துபாயில் இன்று தொடக்கம் - பதக்கவேட்டை நடத்துமா இந்தியா?
x
தினத்தந்தி 23 May 2021 7:27 PM GMT (Updated: 23 May 2021 7:27 PM GMT)

ஆசிய கோப்பை குத்துச்சண்டை போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது.

துபாய், 

இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மொத்தம் 19 வீரர், வீராங்கனைகள் அங்கம் வகிக்கிறார்கள். இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நடப்பு சாம்பியனான அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஷ் குமார், 6 முறை உலக சாம்பியனான மூத்த வீராங்கனை மேரிகோம், சிம்ரன்ஜித் கவுர், நடப்பு சாம்பியன் பூஜா ராணி, லவ்லினா ஆகியோரும் அடங்குவர். டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தயாராவதற்கு இந்த போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஆண்கள் அணியின் உயர்செயல்பாட்டு இயக்குனர் சான்டியாகோ நிவா கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம், எதை சரி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த சாம்பியன்ஷிப் வழங்கி இருக்கிறது. அந்த வகையில் இது நமக்கு நல்லதாகும். ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றவர்களும், உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர்களும் களம் காணுவதால் இந்த போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என்பதை அறிவோம். ஆனால் எங்களது அணி நிச்சயம் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவிக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

இந்த போட்டி முதலில் டெல்லியில் நடக்க இருந்தது. கொரோனா பரவலால் துபாய்க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் தங்கப்பதக்கம் கைப்பற்றுவோருக்கு ரூ.7¼ லட்சமும், வெள்ளிப்பதக்கம் வெல்வோருக்கு ரூ.3½ லட்சமும், வெண்கலப்பதக்கம் பெறுவோருக்கு ரூ.1¾ லட்சமும் வழங்கப்படும்.

2019-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 13 பதக்கம் வென்றதே இந்த போட்டியில் இ்ந்தியாவின் சிறந்த செயல்படாகும். இந்த முறை அதைவிட இந்தியா அதிக அளவில் பதக்கவேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story