ஒலிம்பிக் போட்டிக்கு 190 பேர் கொண்ட இந்திய அணி அனுப்பப்படும் - நரிந்தர் பத்ரா தகவல்


ஒலிம்பிக் போட்டிக்கு 190 பேர் கொண்ட இந்திய அணி அனுப்பப்படும் - நரிந்தர் பத்ரா தகவல்
x
தினத்தந்தி 4 Jun 2021 1:54 AM GMT (Updated: 4 Jun 2021 1:54 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 190 பேர் கொண்ட இந்திய அணி அனுப்பப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்தார்.

புதுடெல்லி, 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை நடத்த பலத்த எதிர்ப்பு கிளம்பினாலும், போட்டியை நடத்துவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினரும், போட்டி அமைப்பாளர்களும் உறுதியாக இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கொரோனா அச்சம் காரணமாக போட்டி ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 10 ஆயிரம் தன்னார்வலர்கள் விலகி விட்டாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழு தலைவர் செய்கோ ஹஷிமோட்டோ உறுதிபட தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு சூழ்நிலை எல்லைமீறி பெரும்பாலான வெளிநாட்டு அணிகள் வரமுடியாமல் போனால் மட்டுமே போட்டியை நடத்த முடியாது. மற்றபடி எந்த வகையிலும் போட்டி ரத்து செய்யப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் (கிட்ஸ்) வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நீரஜ் சோப்ரா (தடகளம்), பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா, சுமித் மாலிக் (மல்யுத்தம்) உள்பட 6 பேர் கலந்து கொண்டனர்.

இதில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பேசுகையில், ‘உலகின் சிறந்த வீரர்கள் போட்டியிடும் மேடை ஒலிம்பிக் ஆகும். ஒலிம்பிக் போட்டியில் நமது வீரர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்று நமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருவது குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தேசமும் இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். வீரர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய விளையாட்டு அமைச்சகம் தயாராக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா கூறுகையில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து பங்கேற்க இதுவரை 100 பேர் (56 வீரர்கள், 44 வீராங்கனைகள்) தகுதி பெற்றுள்ளனர். அடுத்த 2-3 வாரங்களில் தகுதி சுற்று நடைமுறைகள் நிறைவு பெற்று விடும். மொத்தம் 125 முதல் 135 பேர் வரை தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்பட ஏறக்குறைய 190 பேர் கொண்ட வலுவான இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்படும். இந்த போட்டியில் இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கத்தை வெல்ல வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.

Next Story