டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
x
தினத்தந்தி 4 Jun 2021 7:07 PM GMT (Updated: 4 Jun 2021 7:07 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான மல்யுத்த பந்தயத்தின் கடைசி தகுதி சுற்று போட்டி பல்கேரியா தலைநகர் சோபியாவில் கடந்த மாதம் நடந்தது. இதில் ஆண்களுக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் இறுதிபோட்டிக்கு முன்னேறியதுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஹரியானாவை சேர்ந்த 28 வயதான சுமித் மாலிக் 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.

பல்கேரியாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியின் போது சுமித் மாலிக்கிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் வீரர் ஒருவர் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி இருப்பது இந்திய அணிக்கு பெருத்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்க 8 பேர் (4 வீரர், 4 வீராங்கனை) தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு முன்பு முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு சுமித் மாலிக் சிகிச்சை எடுத்ததாகவும், அதன் காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சுமித் மாலிக்கின் ‘பி’ மாதிரி வருகிற 10-ந் தேதி சோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. அதிலும் ஊக்க மருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியானால் சுமித் மாலிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

ஆச்சரியம் அளிக்கிறது

இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், ‘சுமித் மாலிக் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்து இருப்பதாகவும் அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஒருங்கிணைந்த உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இருந்து எங்களுக்கு கடந்த வியாழக்கிழமை இ-மெயில் வந்து இருக்கிறது. இது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது. அவர் அதனை (ஊக்க மருந்தை) அறியாமல் தான் எடுத்து இருப்பார். ஏனெனில் கடந்த காலங்களில் அவர் இதுபோல் எந்தவொரு தவறும் இழைத்தது கிடையாது. அவரது ‘பி’ மாதிரி முடிவுக்காக காத்து இருப்போம்’ என்றார்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இந்திய மல்யுத்த வீரர் ஊக்க மருந்து சோதனையில் சிக்குவது இது 2-வது நிகழ்வாகும். இதேபோல் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி 4 ஆண்டுகள் தடை விதிக்கபட்டது நினைவுகூரத்தக்கது.

Next Story