பிரெஞ்ச் பார்முலா 1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் முதலிடம்


பிரெஞ்ச் பார்முலா 1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் முதலிடம்
x
தினத்தந்தி 20 Jun 2021 8:54 PM GMT (Updated: 20 Jun 2021 8:54 PM GMT)

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

லீ கேஸ்டில்லெட், 

இதன் 7-வது சுற்றான பிரெஞ்ச் கிராண்ட்பிரி அங்குள்ள லீ கேஸ்டில்லெட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 309.690 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் செலுத்தினர். இதில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 27 நிமிடம் 25.770 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்ததுடன் அதற்குரிய 26 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவர் ருசித்த 3-வது வெற்றி இதுவாகும். அவரை விட 2.904 வினாடி பின்தங்கிய நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் 3-வதாக வந்தார்.

இதுவரை நடந்துள்ள 7 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் வெர்ஸ்டப்பென் 131 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி வருகிற 27-ந்தேதி ஆஸ்திரியாவில் நடக்கிறது.

Next Story