டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை பார்க்க வரும் உள்ளூர் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை பார்க்க வரும் உள்ளூர் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2021 1:22 AM GMT (Updated: 24 Jun 2021 1:22 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை பார்க்க வரும் ஜப்பான் ரசிகர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் ஒலிம்பிக் போட்டியை பார்க்க வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று ஏற்கனவே ஜப்பான் அரசாங்கம் அறிவித்து விட்டது. உள்நாட்டு ரசிகர்களை பொறுத்தவரை ஒவ்வொரு மைதானத்திலும் அதிகபட்சமாக 10 ஆயிரம் பேர் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை பார்க்க வரும் ஜப்பான் ரசிகர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ‘மது அருந்த தடை, வீரர், வீராங்கனைகளிடம் ஆட்டோகிராப் பெற அனுமதி மறுப்பு, உற்சாகமூட்டும் வகையில் உரக்க கத்தக்கூடாது,  கட்டித் தழுவ கூடாது, கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும், போட்டி முடிந்ததும் வெளியே சுற்றாமல் நேராக வீடுகளுக்கு செல்லவேண்டும்’ போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ‘ஐரோப்பிய கால்பந்து போட்டியில் மைதானம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அவர்கள் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அதே போன்று இங்கு செய்ய முடியாத நிலை உள்ளது. குதூகலமான கொண்டாட்டத்தை விளையாட்டின் பாதுகாப்பு கருதி கட்டுப்படுத்த வேண்டி உள்ளது’ என்று ேடாக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தலைவர் செய்கோ ஹஷிமோட்டா நேற்று தெரிவித்தார்.

Next Story