டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் ஜஜாரியா உலக சாதனை படைத்து தகுதி


டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் ஜஜாரியா உலக சாதனை படைத்து தகுதி
x
தினத்தந்தி 2 July 2021 12:27 AM GMT (Updated: 2 July 2021 12:27 AM GMT)

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் ஜஜாரியா உலக சாதனை படைத்து தகுதி பெற்றார்.

புதுடெல்லி,

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதனை அடுத்து 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஆகஸ்டு 24-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகுரிய இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்-46 பிரிவு) ராஜஸ்தானை சேர்ந்த 40 வயதான தேவேந்திர ஜஜாரியா 65.71 மீட்டர் தூரம் வீசி டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் அவர் தனது முந்தைய உலக சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அவர் 63.97 மீட்டர் தூரம் வீசியதே உலக சாதனையாக இருந்தது.

ஜஜாரியா பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2004 மற்றும் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய உலக சாதனையும் படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரா ஒலிம்பிக் போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெற்று இருப்பதற்கு தன்னுடைய குடும்பத்தினரின் ஆதரவும், தனது பயிற்சியாளரின் முயற்சியும் முக்கிய காரணம் என்று ஜஜாரியா கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் அமித் குமார் சரோஹா (எப் 51 பிரிவு), ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி (எப் 44 பிரிவு) ஆகியோரும் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Next Story