கேல் ரத்னா விருதுக்கு சாய் பிரனீத், ஸ்ரீகாந்த், கோனேரு ஹம்பி பெயர் பரிந்துரை


கேல் ரத்னா விருதுக்கு சாய் பிரனீத், ஸ்ரீகாந்த், கோனேரு ஹம்பி பெயர் பரிந்துரை
x
தினத்தந்தி 2 July 2021 12:30 AM GMT (Updated: 2 July 2021 12:30 AM GMT)

இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு பேட்மிண்டன் வீரர்கள் சாய் பிரனீத், ஸ்ரீகாந்த் மற்றும் செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி ஆகியோரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச போட்டியில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சர்யா விருதும், விளையாட்டுக்கு அதிகம் பங்களிப்பவர்களுக்கு தயான் சந்த் விருதும் அளிக்கப்படுகிறது. தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி இந்த விருதுகள் வழங்கப்படும்.

தேசிய விளையாட்டு விருதுக்கு தகுதி படைத்தவர்களின் பெயர்களை அந்தந்த விளையாட்டுகளின் தேசிய சம்மேளமும், மாநில அரசும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கும். அதில் இருந்து விருதுக்குரிய நபர்களை தேர்வு கமிட்டி முடிவு செய்யும்.

இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு தகுதி படைத்த வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2019-ம் ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதி பெற்று இருக்கும் ஒரே இந்திய வீரருமான சாய் பிரனீத், 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான ஸ்ரீகாந்த் ஆகியோரது பெயரை விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய கேல் ரத்னா விருதுக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

சர்வதேச போட்டியில் வெற்றிகளை பெற்று வரும் வீரர்களான பிரனாய், பிரனாவ் ஜெர்ரி சோப்ரா, சமீர் வர்மா ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்குமாறும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் சிபாரிசு செய்து இருக்கிறது. அத்துடன் பயிற்சியாளர்கள் முரளிதரன், பாஸ்கர் பாபு ஆகியோரது பெயரை துரோணாச்சார்யா விருதுக்கும் பரிந்துரை செய்து இருக்கிறது.

நடப்பு உலக ரேபிட் செஸ் சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான 34 வயது செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி கேல் ரத்னா விருதுக்கு அகில இந்திய சம்மேளனத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த கோனேரு ஹம்பி அடுத்த ஆண்டு நடைபெறும் பிடே பெண்கள் செஸ் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.

முன்னணி செஸ் வீரர்களான விதித் குஜ்ராதி, அதிபன், சேதுராமன், லலித் பாபு, வீராங்கனைகளான பாக்தி குல்கர்னி, பத்மினி ரோத் ஆகியோரது பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு ஏகப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு பேருக்கு தான் கேல் ரத்னா விருது வழங்கப்படும். கடந்த ஆண்டு முதல்முறையாக 5 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டதால் இந்த முறை அந்த விருதுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அளவு கடந்ததாக அதிகரித்து இருக்கிறது.

Next Story