ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக்குக்கு 2 ஆண்டு தடை


ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக்குக்கு 2 ஆண்டு தடை
x
தினத்தந்தி 2 July 2021 10:48 PM GMT (Updated: 2021-07-03T04:18:27+05:30)

ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக்குக்கு 2 ஆண்டு தடை விதித்து உலக மல்யுத்த சம்மேளனம் நேற்று நடவடிக்கை எடுத்தது.

புதுடெல்லி, 

பல்கேரியா நாட்டின் தலைநகர் சோபியாவில் கடந்த மே மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான உலக மல்யுத்த தகுதி சுற்று போட்டியில் ஆண்களுக்கான 125 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் சுமித் மாலிக் இறுதிப்போட்டிக்கு முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் தகுதி சுற்று போட்டியின் போது சுமித் மாலிக்கிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்ததால் கடந்த மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் ஊக்க மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை என்று அவர் மறுத்ததால் அவருடைய ‘பி’ மாதிரியும் சோதனை செய்யப்பட்டது. அதிலும் முந்தைய பரிசோதனையின் முடிவே வந்ததால் சுமித் மாலிக் போட்டிகளில் பங்கேற்க 2 ஆண்டு தடை விதித்து உலக மல்யுத்த சம்மேளனம் நேற்று நடவடிக்கை எடுத்தது. இதனால் சுமித் மாலிக்கின் ஒலிம்பிக் கனவு கலைந்தது. இந்த தடையை எதிர்த்து அப்பீல் செய்ய சுமித் மாலிக்குக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story