ஒலிம்பிக் தீபம் டோக்கியோ வந்தது


ஒலிம்பிக் தீபம் டோக்கியோ வந்தது
x
தினத்தந்தி 10 July 2021 1:36 AM GMT (Updated: 10 July 2021 1:36 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

டோக்கியோ,

ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு அது பல நாடுகளை கடந்து போட்டியின் தொடக்க நாளில் நடைபெறும் கோலாகல விழாவின் போது ஸ்டேடியத்தில் ஏற்றி வைக்கப்படுவதுடன், அந்த போட்டி முடிவடையும் வரை அணையாமல் பாதுகாக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி ஒலிம்பிக் தீபம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிரீசில் இருந்து ஜப்பான் வந்தடைந்தது. போட்டி தள்ளிப்போனதால் ஒரு ஆண்டுக்கு மேலாக பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒலிம்பிக் தீபம் கடந்த 25-ந் தேதி புகுஷிமா மாகாணத்தில் இருந்து தொடர் ஓட்ட பயணத்தை தொடங்கியது. அங்குள்ள 46 மாகாணங்கள் வழியாக தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்ட ஒலிம்பிக் தீபம் நேற்று டோக்கியோ வந்தடைந்தது.

இதையொட்டி அங்குள்ள ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் கவர்னர் யுரிகோ கோய்கி உள்ளிட்ட போட்டி அமைப்பாளர்கள் கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை வரவேற்றனர். டோக்கியோவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும் இந்த தீபம் தொடக்க விழா நாளன்று ஒலிம்பிக் நடைபெறும் ஸ்டேடியத்தை வந்தடையும். ஒலிம்பிக் தீபத்தின் வரவேற்பு விழா நடைபெற்ற ஸ்டேடியத்தின் அருகில், கொரோனா பரவல் இருக்கும் இந்த சமயத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதா? என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

Next Story