ஓட்டப்பந்தயத்தில் சாதித்த ‘இல்லத்தரசி’


ஓட்டப்பந்தயத்தில் சாதித்த ‘இல்லத்தரசி’
x
தினத்தந்தி 12 July 2021 12:52 AM GMT (Updated: 12 July 2021 12:52 AM GMT)

பெண்கள், குழந்தை பெற்றுக்கொண்டு விளையாட்டு களத்தில் சாதனையாளராக உருவெடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் ஒலிம்பிக் என்றால் சொல்லவே வேண்டாம்.

1948-ம் ஆண்டு லண்டனில் நடந்த 14-வது ஒலிம்பிக்கில் இரண்டு குழந்தைகளின் தாயான நெதர்லாந்து தடகள வீராங்கனை பேனி பிளாங்கர்ஸ் கோயனின் ‘தங்கவேட்டை’ வரலாற்றில் முக்கியமான ஒன்றாக, அடுத்த தலைமுறையினருக்கு உந்துசக்தியாக அமைந்தது என்றால் மிகையாகாது.

அப்போது பேனி பிளாங்கர்சின் வயது 30. ‘குழந்தைகள் வந்தாச்சு... இனி நல்ல இல்லத்தரசியாக வீட்டில் இருந்து அவர்களை கவனிக்க வேண்டியது தானே. விளையாட்டு எல்லாம் தேவையா?’ என்று சக வீரர், வீராங்கனைகளே அவரை கிண்டல் செய்தனர். அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டு என்று நெதர்லாந்து ஊடகங்களும் எழுதின. அது மட்டுமின்றி அந்த சமயம் திருமணமாகி குழந்தை பெற்ற வீராங்கனைகளின் மறுபிரவேசம் என்பது அரிதான விஷயமாக இருந்தது.

ஆனால் தனது பயிற்சியாளரும், கணவருமான ஜான் பிளாங்கர்சின் ஒத்துழைப்போடு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தன்னை பட்டை தீட்டிக்கொண்ட பேனி பிளாங்கர்ஸ் அந்த ஒலிம்பிக்கில் 100 மீட்டர், 200 மீட்டர், 80 மீட்டர் தடை ஓட்டம், 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கத்தை வென்று வியப்பூட்டினார். ஒரு ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பும் கிடைத்தது.

உலக சாதனையாளரான இவர் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதலிலும் பதக்கம் வென்றிருக்க முடியும். ஆனால் அந்த சமயம் மகளிருக்கு தடகளத்தில் தனிநபர் பிரிவில் மூன்று போட்டிகளுக்கு மேல் பங்கேற்க அனுமதி கிடையாது.

ஏற்கனவே 1936-ம் ஆண்டு ஒலிம்பிக்கிலும் அவர் கலந்து கொண்டார். அதன் பிறகு 2-ம் உலகப்போர் காரணமாக அடுத்த ஒலிம்பிக்குக்கு 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இல்லாவிட்டால் அவர் கழுத்தை இன்னும் நிறைய பதக்கங்கள் அலங்கரித்து இருக்கும்.

‘பறக்கும் ஹவுஸ் ஒயிப்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பேனி பிளாங்கர்சை 20-ம் நூற்றாண்டின் தலைச்சிறந்த தடகள வீராங்கனையாக சர்வதேச தடகள சம்மேளனம் தேர்வு செய்து பெருமைப்படுத்தியது. 2004-ம் ஆண்டு தனது 85-வது வயதில் மறைந்தார். அவரை கவுரவப்படுத்தும் விதமாக நெதர்லாந்து அரசு ரோட்டர்டாமில் அவருக்கு சிலை நிறுவியது.


Next Story