ஒலிம்பிக் தொடக்க நாளான இன்று வில்வித்தையில் களம் இறங்குகிறது இந்தியா


ஒலிம்பிக் தொடக்க நாளான இன்று வில்வித்தையில் களம் இறங்குகிறது இந்தியா
x
தினத்தந்தி 22 July 2021 10:07 PM GMT (Updated: 2021-07-23T03:37:55+05:30)

டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க நாளான இன்று நடைபெறும் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்
உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் 32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றி ஆகஸ்டு 8-ந் தேதி வரை அரங்கேறும் இந்த போட்டியில் 5 மாற்று வீரர்கள் உள்பட 125 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. மொத்தம் 18 விளையாட்டுகளில் இந்தியா பதக்க வேட்டையில் ஈடுபட இருக்கிறது.ஒலிம்பிக் தொடக்க விழா இன்று நடந்தாலும் கால்பந்து, பேஸ்பால் போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது.

வில்வித்தையில் இந்திய வீரர், வீராங்கனை
முதல் நாளான இன்று நடைபெறும் வில்வித்தை தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் பெண்களுக்கான ரீகர்வ் தனிநபர் தகுதி சுற்று பந்தயத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் தீபிகா குமாரி தடம் பதிக்கிறார். இந்த தகுதி சுற்றில் ஒவ்வொரு வீராங்கனைகளும் வெளிப்படுத்தும் திறமையின் அடிப்படையில் தரநிலை நிர்ணயிக்கப்பட்டு யார், யாருடன் மோதுவது என்பது முடிவாகும்.காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆண்களுக்கான ரீகர்வ் தனிநபர் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் அதானு தாஸ், 
பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் களம் காணுகிறார்கள்.

பிரேசில் அணி வெற்றி
ஆண்களுக்கான கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.‘பி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் கடந்த முறை இறுதிப்போட்டியில் மோதிய பிரேசில்-ஜெர்மனி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியோ ஒலிம்பிக் சாம்பியனான பிரேசில் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. பிரேசில் அணியில் ரிச்சர்லிசன் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.‘சி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் 
ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்தது.

ஒலிம்பிக் தொடக்க விழா மற்றும் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்2, 3, 4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story