ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வியப்பூட்டிய குட்டிநாடு


ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வியப்பூட்டிய குட்டிநாடு
x
தினத்தந்தி 27 July 2021 10:57 PM GMT (Updated: 27 July 2021 10:57 PM GMT)

டோக்கியோவில் நடந்து வரும் 32-வது ஒலிம்பிக் விளையாட்டில் நேற்றைய தினம் வெளிநாட்டு வீரர்களின் சாதனை மற்றும் முக்கியமான முடிவுகள் வருமாறு:-

ஒசாகாவுக்கு அதிர்ச்சி

* டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையும், 4 கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான ஜப்பானின் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். தொடக்க விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் அரிய கவுரவத்தை பெற்ற ஒசாகாவுக்கு சொந்த மண்ணில் ஒலிம்பிக் கிரீடம் சூட வேண்டும் என்ற கனவு சிதைந்தது. 3-வது சுற்றில் அவரை தரவரிசையில் 42-வது இடம் வகிக்கும் மார்கெட்டா வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) 6-1, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். பந்தை வலுவாக வெளியே அடித்து விடும் தவறுகளை ஒசாகா அதிகமாக (24 முறை) செய்ததால் 
சறுக்கி விட்டார்.

* பளுதூக்குதல் 59 கிலோ எடைப்பிரிவில் துர்க்மெனிஸ்தான் வீராங்கனை போலினா குர்யேவா மொத்தம் 217 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி தங்கள் நாட்டை ஒலிம்பிக் வரலாற்று புத்தகத்தில் இடம் பெறச் செய்தார். 1991-ம் ஆண்டு தனிநாடாக உருவான துர்க்மெனிஸ்தானுக்கு ஒலிம்பிக்கில் கிடைத்த முதல் பதக்கம் இது தான்.

சிமோன் பைல்சுக்கு சிக்கல்

* உலகின் தலைச்சிறந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளில் ஒருவரான 24 வயதான அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் கடந்த ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் 6 தங்கம் வெல்லும் இலக்கோடு வந்த அவருக்கு காயம் தொந்தரவாக அமைந்துள்ளது. உடல்தகுதி பிரச்சினையால் அணிக்கான இறுதிப்போட்டியில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தகுதி மருத்துவ குழுவினரால் தினமும் கண்காணிக்கப்படுகிறது. அதை பொறுத்து தனிநபர் இறுதிசுற்றுகளில் அவர் ஆடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் அறிவித்துள்ளது.

* ஆஸ்திரேலிய அலைச்சறுக்கு வீரர் ஒவென் ரைட் கடந்த 2015-ம் ஆண்டு பயிற்சியின் போது தலையில் காயமடைந்தார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. நினைவுகளை இழந்து நடப்பதற்கு கூட சிரமப்பட்டார். இப்படிப்பட்ட கடுமையான சோதனைகளை எல்லாம் கடந்து இந்த ஒலிம்பிக்கில் சாதித்திருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் அலைசறுக்கு போட்டியில் அவர் வெண்கலம் வென்றார்.

சிறிய நாடுக்கு மகுடம்

* இங்கிலாந்து ஆட்சியின் கீழ் வடக்கு அட்லான்டிக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு பெர்முடா. அந்த நாட்டில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை வெறும் 63 ஆயிரம் தான். அவர்கள் 2 பேரை டோக்கியோ ஒலிம்பிக்குக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் தங்கப்பதக்கத்தை வென்று வியப்பூட்டியுள்ளார். அவரது பெயர் டப்பி புளோரா. பெண்களுக்கான டிரையத்லானில் (நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய 3 பந்தயங்களை உள்ளடக்கியது) 33 வயதான டப்பி 1 மணி 55 நிமிடம் 36 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்க மேடையில் ஏறினார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தங்கத்தை ருசித்த குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடு என்ற பெருமையை பெர்முடா பெற்றது. பெர்முடா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது இது 2-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு அந்த நாட்டைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் கிளாரென்ஸ் ஹில் 1976-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருந்தார்.

ஜப்பான் ‘நம்பர் ஒன்’

5-வது நாள் முடிவில் பதக்கப்பட்டியலில் ஜப்பான் 10 தங்கம் 3 வெள்ளி, 5 வெண்கலம் என்று 18 பதக்கத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்கா 9 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் என 27 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், சீனா 9 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என்று 21 பதக்கத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.

Next Story