டோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன் வீரர் மோமோட்டா வெளியேற்றம்


டோக்கியோ ஒலிம்பிக் 2020: பேட்மிண்டன் வீரர் மோமோட்டா வெளியேற்றம்
x
தினத்தந்தி 29 July 2021 4:05 AM GMT (Updated: 2021-07-29T09:35:04+05:30)

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்றைய தினத்தில் வெளிநாட்டு வீரர்களின் சில முக்கியமான போட்டிகளின் முடிவு வருமாறு:-

பைல்சுக்கு மேலும் சிக்கல்
*‘கோல்டன்ஸ்லாம்’ என்ற கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது 3-வது சுற்றில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினாவை (ஸ்பெயின்) விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். அடுத்து அவர் ஜப்பானின் நிஷிகோரியுடன் மோதுகிறார்.

*கடந்த ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்றவரான அமெரிக்க ஜிம்னாஸ்டிக்கின் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் சிமோன் பைல்ஸ் மனஅழுத்தத்திற்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. போட்டியில் 
முழுமையாக கவனம் செலுத்தும் அளவுக்கு அவரது மனநிலை இல்லாததால், பெண்கள் அணிக்கான இறுதிப்போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அவர் ஆல்-ரவுண்ட் தனிநபர் இறுதிசுற்றில் இருந்தும் விலகியுள்ளார். எஞ்சிய தனிநபர் பிரிவுகளிலும் அவர் கலந்து கொள்வது சந்தேகம் தான். இந்த ஒலிம்பிக்கில் 5 தங்கம் வெல்வார் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது விலகல் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

லெடக்கிக்கு தங்கம்
*நீச்சலில் 400 மீட்டர் பிரீஸ்டைலில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க நட்சத்திர வீராங்கனை கேட்டி லெடக்கி நேற்று 200 மீட்டர் பிரீஸ்டைலில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதில் ஆஸ்திரேலியாவின் அரியர்னே டிட்மஸ் புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அதன் பிறகு நடந்த 1500 மீட்டர் பிரீஸ்டைலில் பரிகாரம் தேடிக்கொண்ட லெடக்கி 15 நிமிடம் 37.34 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கபளீகரம் செய்தார். 2012-ம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் லெடக்கிக்கு ஒட்டுமொத்தத்தில் இது 6-வது தங்கப்பதக்கமாகும்.

*ரக்பி செவன்ஸ் விளையாட்டில் பிஜி அணி 27-12 என்ற புள்ளி கணக்கில் உலக சாம்பியனான நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக மகுடம் சூடியது.

மோமோட்டா ‘அவுட்’
*ஆண்களுக்கான பேட்மிண்டனில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், இரண்டு முறை உலக சாம்பியனுமான கென்டோ மோமோட்டா (ஜப்பான்) உள்ளூர் சூழலில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது ஒலிம்பிக் பதக்க கனவு லீக் சுற்றோடு முடிவுக்கு வந்தது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகித்த அவர் நேற்றைய ஆட்டத்தில் 15-21, 19-21 என்ற நேர்செட்டில் 38-ம் நிலை வீரர் ஹியோ கிவாங் ஹீயிடம் (தென்கொரியா) ‘சரண்’ அடைந்தார். இந்த பிரிவில் 2 வெற்றியுடன் ஹியோ கிவாங் ‘நாக்-அவுட்‘ சுற்றை அடைந்தார். தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 26 வயதான மோமோட்டா நடையை கட்டினார்.

Next Story