ஜூடோவில் பதக்கத்தை வாரிகுவிக்கும் ஜப்பான்


ஜூடோவில் பதக்கத்தை வாரிகுவிக்கும் ஜப்பான்
x
தினத்தந்தி 29 July 2021 9:07 PM GMT (Updated: 29 July 2021 9:07 PM GMT)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடந்து வரும் ஒலிம்பிக் கொண்டாட்டத்தில் நேற்று வெளிநாட்டு வீரர்களின் சில முக்கியமான முடிவுகள் வருமாறு.

டோக்கியோ, 

* நீச்சலில் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைலில் அமெரிக்க வீரர் காலெப் டிரஸ்செல் 47.02 வினாடிகளில் புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றதுடன் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கைல் சால்மெர்சை (47.08 வினாடியுடன் வெள்ளிப்பதக்கம்) பின்னுக்கு தள்ளினார்.

*டென்னிஸ் போட்டிகளில் ஆண்களுக்கான ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை ஊதித்தள்ளி அரைஇறுதியை எட்டினார். ஜோகோவிச் அடுத்து அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் (ஜெர்மனி) மோதுகிறார்.

*டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் சென் மெங் 9-11, 11-6, 11-4, 5-11, 5-11, 11-4, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் சன் இங்சாவை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார். இதன் ஆண்கள் ஒற்றையரிலும் இரண்டு சீன வீரர்களே இறுதிப்போட்டிக்கு வந்திருப்பதால் அதிலும் தங்கம், வெள்ளி சீனாவுக்கே கிட்டும்.

*தற்காப்பு கலையான ஜூடோவில் ஜப்பானின் ஆதிக்கம் நீள்கிறது. ஆண்களுக்கான 100 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ஆரோன் வோல்ப், தென்கொரியாவின் சோ குஹாமை வீழ்த்தி தங்கத்தை சொந்தமாக்கினார். இதன் பெண்களுக்கான 78 கிலோ எடைப்பிரிவில் ஜப்பானின் ஷோரி ஹமடாவின் கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரித்தது.

ஜப்பான் இதுவரை வாரியுள்ள 15 தங்கப்பதக்கத்தில் 8 ஜூடோ போட்டியில் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஒரு வெள்ளி, வெண்கலமும் பெற்று இருக்கிறார்கள்.

Next Story