பிற விளையாட்டு

ஒலிம்பிக்கில் தடகளம் இன்று தொடக்கம் + "||" + Athletics at the Olympics Starting today

ஒலிம்பிக்கில் தடகளம் இன்று தொடக்கம்

ஒலிம்பிக்கில் தடகளம் இன்று தொடக்கம்
ஒலிம்பிக்கில் தடகள போட்டி இன்று தொடங்குகிறது.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குரிய போட்டிகளில் ஒன்றான தடகளம் இன்று தொடங்குகிறது.

தடகளத்தில் பல்வேறு பிரிவு ஓட்டப்பந்தயம், நடைபந்தயம், மாரத்தான், வட்டு எறிதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டிரிப் ஜம்ப், கம்பூன்றி தாண்டுதல், டெகத்லான், ஹெப்டத்லான் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மொத்தம் 48 தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

தடகளத்தின் முதல்நாளான இன்று பெரும்பாலான போட்டிகளில் தகுதி சுற்றே நடக்கிறது. ஒரே ஒரு தங்கப்பதக்கமாக ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிடைக்கும். இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடக்கிறது. 25 பேர் களம் காணும் இந்த பிரிவில் இந்தியர்கள் யாரும் கிடையாது.

ஒலிம்பிக்கின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிசுற்று 1-ந்தேதி அரங்கேறுகிறது. கடந்த 3 ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக தங்கம் வென்ற ஜமைக்காவின் உசேன் போல்ட் ஓய்வு பெற்று விட்டதால் இந்த தடவை புதிய மின்னல்வேக வீரர் உருவெடுக்கப்போகிறார்.

இந்திய தரப்பில் தடகளத்தில் 17 வீரர்கள், 9 வீராங்கனைகள் என்று மொத்தம் 26 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்யராஜீவ், நாகநாதன், ரேவதி, சுபா, தனலட்சுமி ஆகிய 5 பேரும் அடங்குவர்கள். இவர்கள் தொடர் ஓட்டத்தில் திறமையை காட்ட உள்ளனர்.

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியர்கள் யாரும் இதுவரை பதக்கம் முகர்ந்ததில்லை. மில்கா சிங், பி.டி.உஷா ஆகியோர் தங்களது காலத்தில் மயிரிழையில் பதக்கங்களை தவற விட்டனர். மற்றபடி யாரும் இலக்கை கூட நெருங்கியதில்லை. இந்த முறை உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ்சோப்ரா, வட்டு எறிதல் வீராங்கனைகள் கமல்பிரீத் கவுர், சீமா பூனியா ஆகியோருக்கு சற்று வாய்ப்பு தென்படுகிறது.