பேட்மிண்டனில் சிந்து அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தல்


பேட்மிண்டனில் சிந்து அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தல்
x
தினத்தந்தி 30 July 2021 10:49 PM GMT (Updated: 2021-07-31T04:19:37+05:30)

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சியுடன் மல்லுக்கட்டினார்.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனும், கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சியுடன் மல்லுக்கட்டினார். இதில் முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய சிந்துவுக்கு, அடுத்த செட்டில் யமாகுச்சி கடும் குடைச்சல் கொடுத்தார். அதில் முதலில் முன்னிலை வகித்த சிந்து ஒரு கட்டத்தில் பின்தங்கி இருந்து மீண்டு வந்து 20-20 சமநிலையை எட்டியதுடன், கடைசியில் தொடர்ச்சியாக 2 புள்ளிகளை எடுத்து வெற்றியை உறுதிப்படுத்தினார். 56 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 22-20 என்ற நேர்செட்டில் யமாகுச்சியை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இதன் மூலம் பதக்கவாய்ப்பை நெருங்கியுள்ள உலக தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் சிந்து இன்று (சனிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான தாய் சு யிங்கை (சீன தைபே) எதிர்கொள்கிறார். இந்த தடையை கடப்பது சிந்துவுக்கு நிச்சயம் பெரும் போராட்டமாக இருக்கும். இருவரும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் தாய் சு யிங் 13 ஆட்டங்களிலும், சிந்து 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளனர். இதில் கடைசி 3 ஆட்டங்களில் சிந்து தோல்வி அடைந்ததும் அடங்கும்.

அரைஇறுதியில் வெற்றி காணும் வீராங்கனை தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார். தோல்வி அடையும் வீராங்கனை வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடுவார்.

Next Story