டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் குத்துச்சண்டையில் லவ்லினா உறுதி செய்தார்


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் குத்துச்சண்டையில் லவ்லினா உறுதி செய்தார்
x
தினத்தந்தி 30 July 2021 11:40 PM GMT (Updated: 2021-07-31T05:10:43+05:30)

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைக்கிறது.

டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்ததாக அமைந்தது என்றால் மிகையாகாது.

குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், முன்னாள் உலக சாம்பியனான சீன தைபேயின் நின் சின் சென்னுடன் மோதினார்.

ஒலிம்பிக்கில் முதல்முறையாக கால்பதித்துள்ள லவ்லினா தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தார். அவரது சரமாரியான குத்துகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின் சின் சென் தடுமாறினார். 2-வது ரவுண்டில் நின் சின் சென் ஆக்ரோஷமாக பதிலடி கொடுக்க முயற்சித்தார். ஆனால் தனது உயரத்தை சாதகமாக பயன்படுத்தி லவ்லினா அதனை சாதுர்யமாக சமாளித்தார். கடைசி ரவுண்டிலும் நின் சின் சென் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் லவ்லினா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரைஇறுதியில் லவ்லினா, 2019-ம் ஆண்டு உலக சாம்பியனான துருக்கி வீராங்கனை பூசெனஸ் சர்மினெலியை வருகிற 4-ந் தேதி எதிர்கொள்கிறார்.

குத்துச்சண்டையை பொறுத்தமட்டில் அரைஇறுதிக்கு முன்னேறினாலே பதக்கம் கிடைத்துவிடும். அதன்படி லவ்லினா குறைந்தது வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார். இதன் மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டை வரலாற்றில் பதக்கம் வெல்லும் 3-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங்கும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மேரிகோமும் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றுள்ளனர்.

அசாமை சேர்ந்த 23 வயதான லவ்லினா உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை வெண்கலம் வென்றவர் ஆவார். அதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இப்போது ஒலிம்பிக்கில் பதக்கமேடையை எட்டி பரவசப்படுத்தியிருக்கிறார்.

நடப்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் இரண்டாவது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2-வது நாளில் பெண்களுக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் முதல்முறையாக பதக்கத்தை முத்தமிடும் லவ்லினாவுக்கு பாராட்டுகள் குவிகிறது. மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ரா, இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா உள்பட பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய குத்துச்சண்டைக்கு மட்டுமின்றி அசாம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் இது பெருமைக்குரிய தருணமாகும். உண்மையிலேயே லவ்லினா மேற்கொண்ட மிகவும் தைரியமான முயற்சி இதுவாகும். அவர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தார். அவரது தாயார் உடல் நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். லவ்லினா பிறவியிலேயே போராட்ட குணம் நிறைந்தவர் எனலாம். இந்த வெற்றி இந்திய குத்துச்சண்டைக்கு மிகப்பெரிய மைல்கல்லாகும். லவ்லினாவின் தொடக்கம் தான் இது. அவர் கவனமாக திட்டமிட்டு செயல்பட்டு இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்ல வேண்டியது அவசியமானதாகும்’ என்று கூறியுள்ளார்.

குத்துச்சண்டையில் பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 0-5 என்ற கணக்கில் தாய்லாந்தின் சுதாபோர்ன் சீசன்டீயிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

Next Story