குத்துச்சண்டையில் அமித் பன்ஹால், பூஜா ராணி தோல்வி வில்வித்தையில் அதானு தாஸ் வெளியேற்றம்


குத்துச்சண்டையில் அமித் பன்ஹால், பூஜா ராணி தோல்வி வில்வித்தையில் அதானு தாஸ் வெளியேற்றம்
x
தினத்தந்தி 1 Aug 2021 12:01 AM GMT (Updated: 2021-08-01T05:31:40+05:30)

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவின் அமித் பன்ஹால், பூஜா ராணி தோல்வி அடைந்தனர். வில்வித்தையில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் அதானு தாஸ் தோற்று வெளியேறினார்.

டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான நேற்று இந்தியாவுக்கு எல்லாமே ஏமாற்றம் அளிக்கும் வகையில் முடிவுகள் அமைந்தன.

வில்வித்தையில் ஆண்களுக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான ஜப்பானின் தகாஹரு புருகவாவை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் முதல் செட்டை இழந்த அதானு தாஸ், 3-வது செட்டை கைப்பற்றியதுடன், 2-வது, 4-வது செட்டுகளில் சமநிலை வகித்தார். இறுதியில் கடைசி செட்டை வசப்படுத்திய தகாஹரு புருகவா 6-4 என்ற கணக்கில் அதானு தாசை வீழ்த்தினார். இந்த தோல்வியால் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் சவால் பதக்கமின்றி முடிவுக்கு வந்தது.

குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் நேரடியாக களம் இறங்கிய ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் அமித் பன்ஹால், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான கொலம்பியா வீரர் யுபெர்ஜென் மார்டினசுடன் கோதாவில் குதித்தார்.

பதக்க மேடையை நோக்கி பயணிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமித் பன்ஹால் 1-4 என்ற கணக்கில் யுபெர்ஜெனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து நடையை கட்டினார். இத்துடன் குத்துச்சண்டைக்கு தகுதி பெற்ற 5 இந்திய வீரர்களில் 4 பேர் தங்களது முதல் பந்தயத்திலேயே தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளனர். சூப்பர் ஹெவிவெயிட் பிரிவில் சதீஷ்குமார் மட்டும் கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

இதேபோல் பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி 0-5 என்ற கணக்கில் சீனாவின் கியான் லியிடம் தோல்வி கண்டு பதக்கத்தை உறுதி செய்யும் வாய்ப்பை கோட்டை விட்டார்.

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்றில் 37 வீராங்கனைகள் கலந்து கொண்டு இலக்கை குறி வைத்தனர். இதில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும். ஆனால் இந்திய வீராங்கனைகள் மீண்டும் தாக்கம் எதுவும் ஏற்படுத்தாமல் பரிதாபம் அளித்தனர். அஞ்சும் மோட்ஜில் 1,167 புள்ளிகளுடன் 15-வது இடமும், தேஜஸ்வினி சவாந்த் 1,154 புள்ளிகளுடன் 33-வது இடமும் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

பாய்மர படகு போட்டியில் ஆண்களுக்கான 49 இஆர் பிரிவில் 19 ஜோடிகள் பங்கேற்றது. இதன் தகுதி சுற்று முடிவில் தமிழகத்தை சேர்ந்த கணபதி-வருண் தக்கர் இணை 17-வது இடம் பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டனர். இதில் டாப்-10 இடங்களை பிடிப்பவர்கள் தான் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story