பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் தாம்சனுக்கு தங்கம்


பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் தாம்சனுக்கு தங்கம்
x
தினத்தந்தி 1 Aug 2021 1:09 AM GMT (Updated: 1 Aug 2021 1:09 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் தாம்சன் மகுடம் சூடி அதிவேக வீராங்கனையாக ஜொலித்தார்.

டோக்கியோ, 

32-வது டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று வெளிநாட்டு வீரர்களின் சில முக்கியமான போட்டிகளின் முடிவு வருமாறு:-

*இந்த ஆண்டில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வரிசையாக கபளீகரம் செய்து ‘கோல்டன்ஸ்லாம்’ என்ற கனவுடன் டோக்கியோ வந்த உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) அரைஇறுதியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து நேற்று வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினின் பாப்லோ காரெனா பஸ்டாவுடன் மோதினார். இதிலும் அவருக்கு சோகமே மிஞ்சியது. காரெனா பஸ்டா 6-4, 6-7 (6), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த ஆட்டத்தின் போது கோபத்தில் ஜோகோவிச் ஒரு முறை பேட்டை (ராக்கெட்) வெளியே தூக்கி எறிந்தார். இன்னொரு தடவை பேட்டை ஓங்கி அடித்து உடைத்தார். இதன் பின்னர் கலப்பு இரட்டையர் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இருந்து ஜோகோவிச் கடைசி நேரத்தில் விலகி விட்டதால் அவர் வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறார்.

*டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச் 7-5, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் மார்கெட்டா வோன்ட்ரோசோவாவை தோற்கடித்து தங்கப்பதக்க மேடையில் ஏறினார். இதன் மூலம் ஒலிம்பிக் டென்னிசில் தங்கத்தை ருசித்த முதல் சுவிட்சர்லாந்து வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 1-6, 7-6 (5),6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் ரைபகினாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.

*ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பிரேசில் அணி கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. வெற்றிக்கான கோலை மேத்யூஸ் குன்ஹா 37-வது நிமிடத்தில் அடித்தார். மற்ற ஆட்டங்களில் ஸ்பெயின், ஜப்பான், மெக்சிகோ ஆகிய அணிகளும் தங்களது கால்இறுதியில் வெற்றி கண்டன.

* நீச்சலில் பெண்களுக்கான 800 மீட்டர் பிரீஸ்டைலில் உலக சாதனையாளரும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்க ‘சூறாவளி’ கேட்டி லெடக்கி 8 நிமிடம் 12.57 வினாடிகளில் இலக்கை நீந்தி தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். நடப்பு ஒலிம்பிக்கில் அவரது 4-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே ஒரு தங்கமும், 2 வெள்ளியும் வென்று இருந்தார்.

ஒட்டுமொத்தத்தில் ஒலிம்பிக்கில் இதுவரை 7 தங்கப்பதக்கம் வென்றுள்ள லெடக்கி அதில் தனிநபராக மட்டும் 6-ல் வாகை சூடியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் நீச்சலில் தனிநபர் பிரிவில் அதிக தங்கம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பை 24 வயதான லெடக்கி பெற்றார். ‘இந்த ஒலிம்பிக்கில் எனக்குரிய போட்டிகள் முடிந்து விட்டன. இது எனது கடைசி ஒலிம்பிக் அல்ல. 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் நிச்சயம் விளையாடுவேன். 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கூட பங்கேற்க வாய்ப்புள்ளது’ என்று லெடக்கி குறிப்பிட்டார்.

*உலகின் அதிவேக வீராங்கனை யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டத்தில் டாப்-3 இடங்களையும் ஜமைக்கா வீராங்கனைகள் வாரி சுருட்டினர். நடப்பு சாம்பியனான ஜமைக்காவின் எலைன் தாம்சன் ஹெரா 10.61 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கத்தை சொந்தமாக்கினார். 2008, 2012-ல் ஒலிம்பிக் சாம்பியனான ஷெல்லி அன் பிராசெர் 10.74 வினாடிகளில் 2-வதாக வந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ஷெரிகா ஜாக்சனுக்கு (10.76 வினாடி) வெண்கலம் கிடைத்தது.

*தடகளத்தில் மிக முக்கிய போட்டியாக ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகின் அதிவேக வீரர் யார்? என்பதற்கான ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று இந்திய நேரப்படி மாலை 6.20 மணிக்கு நடக்கிறது. 3 முறை சாம்பியனான ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் கேத்லின் போன்ற ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் புதிய வீரர் இந்த முறை மின்னல் வேக வீரராக உருவாகப்போகிறார். அமெரிக்காவின் டிராவோன் புரோமெல், ரோனி பாகெர், ஜமைக்காவின் யோகன் பிளாக், தென்ஆப்பிரிக்காவின் சிம்பின் அகானி உள்ளிட்டோர் பட்டம் வெல்ல வரிந்து கட்டுகிறார்கள்.

Next Story