ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்று ஆஸ்திரேலிய நீச்சல் வீரர், வீராங்கனை சாதனை


ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்று ஆஸ்திரேலிய நீச்சல் வீரர், வீராங்கனை சாதனை
x
தினத்தந்தி 1 Aug 2021 9:50 PM GMT (Updated: 2021-08-02T03:20:02+05:30)

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் 7 பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் பந்தயம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா மெக்கியோன் புதிய நீச்சல் ராணியாக உருவெடுத்தார். நேற்று காலையில் நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைலில் 23.81 வினாடிகளில் இலக்கை கடந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கிய எம்மா மெக்கியோன், அதன் பிறகு அணிகளுக்கான 4x100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சலில் கைலீ மெக்கியோன், செல்சி ஹோட்ஜ்ஸ், கேட் கேம்ப்பெல் ஆகியோருடன் இணைந்து 3 நிமிடம் 51.60 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். நடப்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம், 3 வெண்கலம் என்று மொத்தம் 7 பதக்கங்களை அறுவடை செய்து மலைக்க வைத்த எம்மா மெக்கியோன் ஒரு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை ருசித்த நீச்சல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

மற்ற விளையாட்டுகளையும் சேர்த்து பார்த்தால் ஒரு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் பெற்றவரான சோவியத்யூனியன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மரியா கோரோகோவ்ஸ்கயாவின் சாதனையை (1952-ம் ஆண்டு ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் 2 தங்கம், 5 வெள்ளியுடன் 7 பதக்கம்) சமன் செய்தார்.

27 வயதான எம்மா மெக்கியோன் கூறுகையில், ‘ஒரே நாளில் (நேற்று) 2 தங்கப்பதக்கம் வெல்வேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இன்னும் நம்ப முடியவில்லை. எல்லாம் கனவு போல் உள்ளது. மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன். என்னை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்’ என்றார்.

ஆண்கள் பிரிவை எடுத்துக் கொண்டால், அமெரிக்காவின் காலெப் டிரஸ்செல் நீச்சல் மன்னனாக ஜொலித்தார். கடைசி நாளில் 50 மீட்டர் பிரீஸ்டைலில் ஒலிம்பிக் சாதனையுடன் 21.07 வினாடிகளில் மகுடம் சூடி உலகின் அதிவேக நீச்சல் வீரர் என்ற சிறப்பை பெற்ற டிரஸ்செல், தொடர்ந்து அணிகளுக்கான 4x100 மீட்டர் மெட்லே பிரிவில் அமெரிக்கா தங்கம் வெல்ல உதவிகரமாக இருந்தார். இதில் டிரஸ்செல், ரையன் மர்பி, மைக்கேல் ஆன்ட்ரூ, ஜாச் ஆப்பிள் ஆகியோர் அடங்கிய அமெரிக்கா 3 நிமிடம் 26.78 வினாடிகளில் இலக்கை அடைந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. ஏற்கனவே இந்த பிரிவில் அமெரிக்கா 2009-ம் ஆண்டு 3 நிமிடம் 27.28 வினாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. தங்களது உலக சாதனையை தற்போது மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

இதையும் சேர்த்து 24 வயதான டிரஸ்செல் நடப்பு தொடரில் 5 தங்கத்தை கபளீகரம் செய்து கவனத்தை ஈர்த்துள்ளார். முன்னதாக 100 மீட்டர் பிரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்பிளை, 4x100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவுகளிலும் தங்கம் வென்றிருந்தார்.

Next Story