வட்டுஎறிதலில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுருக்கு 6-வது இடம்


வட்டுஎறிதலில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுருக்கு 6-வது இடம்
x
தினத்தந்தி 2 Aug 2021 10:04 PM GMT (Updated: 2021-08-03T03:34:46+05:30)

ஒலிம்பிக் வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 6-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு எறிதலின் இறுதிசுற்று நேற்றிரவு நடந்தது. இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் உள்பட 12 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தனர். இதில் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 6 வாய்ப்பு வழங்கப்பட்டது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஈரப்பதத்தால் சில வீராங்கனைகளுக்கு வட்டு கையை விட்டு நழுவி சென்று ‘பவுல்’ ஆனதை பார்க்க முடிந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை வளரி அல்மான் அதிகபட்சமாக 68.98 மீட்டர் தூரம் வட்டு எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். நடப்பு தொடரில் தடகளத்தில் அமெரிக்காவின் முதல் தங்கம் இதுவாகும். ஜெர்மனியின் கிறிஸ்டின் புடென்ஸ் (66.86 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், கியூபாவின் யாமி பெரேஸ் வெண்கலப்பதக்கமும் (65.72 மீட்டர்) பெற்றனர். நடப்பு சாம்பியனான குரோஷியாவின் சான்ட்ரா பெர்கோவிச் (65.01 மீட்டர்) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்தியாவின் கமல்பிரீத் கவுர் 63.70 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடமே பிடித்தார். தனக்கு வழங்கப்பட்ட 6 வாய்ப்புகளில் கமல்பிரீத் கவுர் 3 வாய்ப்பில் வட்டை விதிமுறைக்குட்பட்டு எறியாமல் ‘பவுல்’ செய்தது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பை சேர்ந்த 25 வயதான கமல்பிரீத் கவுர் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் நடந்த போட்டியில் 66.59 மீட்டர் தூரம் வரை வட்டு வீசியுள்ளார். அத்தகைய செயல்பாட்டை ஒலிம்பிக்கிலும் காண்பித்திருந்தால் அவருக்கு குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைத்திருக்கும். பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டு விட்டார்.

பெண்களுக்கான 200 மீட்டர் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்துக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. 23.85 வினாடிகளில் இலக்கை கடந்து, ஓடிய 41 பேரில் 38-வது இடத்தை பெற்ற டுட்டீ சந்த் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார். ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 100 மீட்டர் ஓட்டத்திலும் தகுதி சுற்றை தாண்டவில்லை.

பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பியூர்டோ ரிகோ வீராங்கனை ஜாஸ்மின் கமாச்சோ குயின் 12.37 வினாடிகளில் பந்தய தூரத்தை அடைந்து மகுடம் சூடினார். ஒலிம்பிக் தடகளத்தில் பியூர்டோ ரிகோ ருசித்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். உலக சாதனையாளரான அமெரிக்காவின் ஹெனி ஹாரிசன் வெள்ளிப்பதக்கம் (12.52 வினாடி) பெற்றார்.

இதே போல் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நெதர்லாந்தின் சிபான் ஹசனும் (14 நிமிடம் 36.79 வினாடி), ஆண்களுக்கான 3 ஆயிரம் ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் மொராக்கோவின் சோபியானே எல் பாக்காளியும் (8 நிமிடம் 08.90 வினாடி), நீளம் தாண்டுதலில் கிரீஸ் வீரர் மில்டியாடிஸ் டென்டோக்லோவும் (8.41 மீட்டர்) தங்கத்தை வென்றனர்.

Next Story