குத்துச்சண்டை அரைஇறுதியில் லவ்லினா தோல்வி - வெண்கலப்பதக்கம் பெற்றார்


குத்துச்சண்டை அரைஇறுதியில் லவ்லினா தோல்வி - வெண்கலப்பதக்கம் பெற்றார்
x
தினத்தந்தி 4 Aug 2021 6:09 PM GMT (Updated: 4 Aug 2021 6:09 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் அரைஇறுதியில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப்பதக்கம் பெற்றார்.

டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 13-வது நாளான நேற்று நடந்த குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், உலக சாம்பியனான பூசெனஸ் சர்மினெலியை (துருக்கி) சந்தித்தார்.

அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்ததன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்திருந்த லவ்லினா மேலும் முன்னேற்றம் காண்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வலுவான போட்டியாளரான பூசெனஸ் தொடக்கம் முதல் நேர்த்தியாக செயல்பட்டு உயரமான லவ்லினாவுக்கு அனுகூலம் எதுவும் கிடைக்காத வகையில் பார்த்து கொண்டதுடன், அவ்வப்போது குத்துகளையும் விட்டார். லல்வினா பதிலடி கொடுக்க எடுத்த முயற்சியை அவர் தனது துல்லியமான தடுப்பு வியூகத்தின் மூலம் சாதுர்யமாக சமாளித்தார்.

முடிவில் லவ்லினா 0-5 என்ற கணக்கில் பூசெனஸ் சர்மினெலியிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அரிய வாய்ப்பை இழந்தார். குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி அடைபவர்களுக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்படும். இதன்படி லவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.

அசாமை சேர்ந்த 23 வயதான லவ்லினா போர்கோஹைன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற 3-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங்கும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மேரிகோமும் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தனர். அந்த வெற்றியாளர்களின் பட்டியலில் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்ட லவ்லினாவும் இணைந்தார்.

தோல்விக்கு பிறகு லவ்லினா கூறுகையில், ‘எனது யுக்தியை களத்தில் செயல்படுத்த முடியவில்லை. பூசெனஸ் வலுவானவர். தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டால் நான் குத்து வாங்க நேரிடும் என்று நினைத்தேன். எனவே தாக்குதல் பாணியில் இறங்கினேன். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. நான் அவருடைய நம்பிக்கையை தகர்க்க முயற்சித்தேன். ஆனால் அவர் இடைவிடாது சிறப்பாக செயல்பட்டார். ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது கனவாகும். அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். இந்த பதக்கத்துக்காக கடந்த 8 ஆண்டுகளாக கடினமாக உழைத்து இருக்கிறேன். எனது வீட்டையும், குடும்பத்தையும் பிரிந்து இருந்துள்ளேன். விரும்பிய உணவுகளை கூட சாப்பிடாமல் தவிர்த்து இருக்கிறேன். குத்துச்சண்டையில் களம் கண்ட பிறகு நான் ஓய்வின்றி தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபட்டேன். எனவே ஒரு மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ ஓய்வு எடுக்க உள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த நமது நாட்டு மக்களுக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.

வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்திய லவ்லினாவுக்கு பிரதமர் மோடி, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் உள்பட பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story