இறுதிப்போட்டியில் தோல்வி: இந்திய மல்யுத்த வீரர் ரவிகுமாருக்கு வெள்ளிப்பதக்கம்


இறுதிப்போட்டியில் தோல்வி: இந்திய மல்யுத்த வீரர் ரவிகுமாருக்கு வெள்ளிப்பதக்கம்
x
தினத்தந்தி 6 Aug 2021 2:12 AM GMT (Updated: 6 Aug 2021 2:12 AM GMT)

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிகுமார் இறுதிப்போட்டியில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவருக்கு ரூ.4 கோடி வழங்கப்படும் என்று அரியானா முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.

டோக்கியோ, 

இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று ஒரே நாளில் இந்தியா 2 பதக்கத்தை உச்சிமுகர்ந்தது. காலையில் ஆண்கள் ஆக்கியிலும், மாலையில் மல்யுத்தத்திலும் பதக்கம் கிடைத்தது.

மல்யுத்தத்தில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா, இரண்டு முறை உலக சாம்பியனான ரஷியாவின் ஜவுர் உகீவை எதிர்கொண்டார். 6 நிமிடங்கள் கொண்ட இந்த சுற்றில் முதல் பகுதியில் (3 நிமிடம்) ரவிகுமார் தடுமாறினார். அவரை இரண்டு முறை வெளியே தள்ளிவிட்டு புள்ளி எடுத்த ஜவுர் முதல்பகுதியில் 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.

அடுத்த 3 நிமிடங்களில் ரவிகுமார், அவரை மடக்கிப்பிடித்து அமுக்க கடுமையாக முயன்றார். இருவரும் சில புள்ளிகளை பகிர்ந்தனர். ஆனால் பெரிய அளவில் அவரிடம் சிக்காமல் லாவகமாக தப்பித்த ஜவுர் தடுப்பாட்ட யுக்தியில் கனகச்சிதமாக செயல்பட்டு தனது முன்னிலையை தக்க வைத்துக் கொண்டார். முடிவில் ஜவுர் உகீவ் 7-4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். தோல்வி அடைந்த ரவிகுமார் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பளுதூக்குதலில் மீராபாய் சானு (வெள்ளி), பேட்மிண்டனில் பி.வி.சிந்து (வெண்கலம்), குத்துச்சண்டையில் லவ்லினா (வெண்கலம்) மற்றும் ஆண்கள் ஆக்கி அணியினரும் (வெண்கலம்) பதக்கம் வென்றுள்ளனர்.

அரியானாவைச் சேர்ந்த 23 வயதான ரவிகுமார் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கத்தை சுவைத்த 5-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 1952-ம் ஆண்டில் கே.டி.ஜாதவ் (வெண்கலம்), 2008 மற்றும் 2012-ம் ஆண்டில் சுஷில்குமார் (வெண்கலம், வெள்ளி), 2012-ம் ஆண்டில் யோகேஷ்வர்தத் (வெண்கலம்), 2016-ம் ஆண்டில் சாக்‌ஷி மாலிக் (வெண்கலம்) ஏற்கனவே மல்யுத்தத்தில் சாதித்தவர்கள் ஆவர்.

ரவிகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘வெள்ளி நாயகன்’ ரவிகுமாருக்கு ரூ.4 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார். அத்துடன் ‘குரூப்1’ அரசு பதவி மற்றும் சலுகை விலையில் நிலம் அவருக்கு வழங்கப்படும். ரவிகுமாரின் சொந்த ஊரான அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள நாரி கிராமத்தில் நவீன தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story