பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா புதிய வரலாறு தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா ஜனாதிபதி, மோடி வாழ்த்து + "||" + At the Olympics New History of India Gold won Neeraj Chopra President Congratulations to Modi

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா புதிய வரலாறு தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா ஜனாதிபதி, மோடி வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா புதிய வரலாறு தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா ஜனாதிபதி, மோடி வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா 124 பேர் கொண்ட அணியை அனுப்பி வைத்தது.

2-வது நாளில் இந்தியாவின் பதக்க கணக்கை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் மூலம் தொடங்கி வைத்தார். அதன் பிறகு லவ்லினா (குத்துச்சண்டை), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), இந்திய ஆண்கள் ஆக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கமும், மல்யுத்த வீரர் ரவிகுமார் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள் ஏமாற்றம் அளித்தது.

இந்த நிலையில் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கி விட்ட ஒலிம்பிக்கில் நேற்று இந்தியாவுக்கு பெரும் தித்திப்பும், ஆனந்தமும் நிறைந்த நாளாக அமைந்தது. நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று தந்து ஒட்டுமொத்த தேசத்தையும் நேற்று பரவசத்தில் ஆழ்த்தி விட்டார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதி சுற்று நேற்று மாலை அரங்கேறியது. மொத்தம் 12 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு வீரருக்கும் 6 வாய்ப்புகள் வழங்கப்படும். அதிக தூரம் ஈட்டி எறியும் வீரரின் கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரிக்கும்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் புகுந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பிரமிக்க வைத்தார். அதுவே அவரது பதக்க வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. மற்ற வீரர்கள் யாரும் அவரை நெருங்கவில்லை. தனது 2-வது முயற்சியில் மேலும் வேகத்தை அதிகப்படுத்திய நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து ரசிகர்களின் இதயதுடிப்பை எகிற வைத்தார். செக்குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் ஒரு வாய்ப்பில் 86.67 மீட்டர் தூரம் வீசி கொஞ்சம் நெருக்கடி கொடுத்தார். ஆனாலும் 87 மீட்டரை தொடும் அளவுக்கு மற்றவர்களின் ஈட்டி சீறிப்பாயவில்லை.

தனிப்பட்ட சாதனையாக ஜெர்மனியின் ஜோகனஸ் வெட்டர் 97.76 மீட்டர் வீசியிருந்தார். அவர்தான் ஒலிம்பிக்கில் சோப்ராவுக்கு சவாலாக இருப்பார் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜோகனஸ் வெட்டர் 82.52 மீட்டர் தூரத்துடன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

திரில்லிங்கான போட்டியின் முடிவில் 87 மீட்டர் தூரத்துக்கு மேலாக ஈட்டி எறிந்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந் தார். இதன் மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கத்தை ருசித்த முதல் இந்தியர் என்ற புதிய சரித்திரத்தை நிகழ்த்தினார்.

இந்தியா 1900-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. ஆனால் தடகளத்தில் மட்டும் இந்தியாவுக்கு பதக்கம் இல்லாத வெற்றிடம் ஒரு நூற்றாண்டை கடந்த நிலையில், அந்த 121 ஆண்டு கால ஏக்கத்தை நீரஜ் சோப்ரா தணித்திருக்கிறார்.

1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் நார்மன் பிரிட்சார்ட் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்றாலும் அவர் ஆங்கிலோ இந்தியன் என்பதும், அதன் பிறகு அவர் நிரந்தரமாக இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியர்களை பொறுத்தவரை மில்கா சிங் (1960 ரோம் ஒலம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டம்), பி.டி.உஷா (1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை ஓட்டம்) ஆகியோர் ஒலிம்பிக் தடகளத்தில் 4-வது இடத்தை பிடித்து மயிரிழை வித்தியாசத்தில் பதக்கத்தை நழுவ விட்டனர். இதுதான் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவின் முந்தைய சிறந்த செயல்பாடாக இருந்தது.

அத்துடன் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கமகுடம் சூடிய 2-வது இந்தியர் என்ற மகத்தான சிறப்பையும் நீரஜ் சோப்ரா பெற்றார். ஏற்கனவே 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று இருந்தார்.

ஒலிம்பிக் தடகளத்தில் புதிய அத்தியாயத்தை பதித்துள்ள 23 வயதான நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் மற்றும் உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ரா இப்போது உச்சத்தை எட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முன்னதாக நேற்று இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரரை தோற்கடித்து வெண்கலம் வென்று இருந்தார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தத்தில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தம் 7 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதல் 50 இடத்திற்குள் நுழைந்துள்ளது. இத்துடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் நிறைவடைந்தன.

ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு இதுதான். இதற்கு முன்பு2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கம் வென்றதே (2 வெள்ளி, 4 வெண்கலம்) இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது.

பதக்க மேடையில் இந்தியாவின் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்து பெருமைப்படுத்தியுள்ள நீரஜ் சோப்ரா பாராட்டு மழையில் நனைகிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், ‘நீரஜ் சோப்ராவின் மூலம் அரிதான வெற்றி கிட்டியிருக்கிறது. உங்களது ஈட்டி தங்கத்தை வென்று அனைத்து தடைகளையும் உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளது. உங்களது முதலாவது ஒலிம்பிக்கிலேயே தடகளத்தில் இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை கொண்டு வந்துவிட்டீர்கள். இச்சாதனை இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாக அமையும். இந்த பதக்கத்தால் இந்தியா மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளது. இதயபூர்வமான வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு எழுதப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ராவின் இந்த சாதனை என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும். இளம் வீரரான நீரஜ் சோப்ரா அற்புதமாக செயல்பட்டு இருக்கிறார். வியப்புக்குரிய வகையில் விளையாடி இருக்கிறார். ஈடுஇணையற்ற மனஉறுதியை வெளிக்காட்டியிருக்கிறார். தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டுவிட்டர் பதிவில், ‘உங்களால் இன்று இந்தியா ஒளிருகிறது. உங்களது ஈட்டி தேசிய கொடியை பட்டொளி வீசி பறக்க வைத்து இருக்கிறது. உங்களால் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், அனுராக் தாக்குர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அரசியல் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவுக்கு பரிசுகளும் குவிகிறது. ரூ.6 கோடி பரிசுத்தொகையும், குரூப்-1 அரசு வேலையும் வழங்கப்படும் என்று அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார். இதேபோல் பஞ்சாப் மாநில அரசு ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் ரூ.75 லட்சம், இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் ரூ.75 லட்சம் ஆகிய தொகையும் அவருக்கு கிடைக்கும்.