கோல்ப் வீராங்கனை அதிதி பதக்க வாய்ப்பை இழந்தார் 4-வது இடம் பெற்றார்


கோல்ப் வீராங்கனை அதிதி பதக்க வாய்ப்பை இழந்தார் 4-வது இடம் பெற்றார்
x
தினத்தந்தி 8 Aug 2021 3:51 AM GMT (Updated: 8 Aug 2021 3:51 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் கோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் மயிரிழையில் பதக்க வாய்ப்பை பறிகொடுத்து 4-வது இடம் பெற்றார்.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் கோல்ப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அதிதி அசோக், தீக்‌ஷா தாகர் உள்பட 60 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

4 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 3-வது சுற்று முடிவில் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் நெல்லி கோர்டா முதலிடத்திலும், இந்திய வீராங்கனை அதிதி அசோக் 2-வது இடத்திலும் இருந்தனர். இதனால் அதிதி அசோக் பதக்கம் வென்று சரித்திரம் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 4-வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் நடந்தது. ஜப்பான், நியூசிலாந்து வீராங்கனைகள் துல்லியமாக தங்கள் ஷாட்களை அடித்து முன்னேறினர். அதே சமயம் தடுமாற்றம் கண்ட அதிதி 3-வது இடத்துக்கு பின்தங்கினார். அதன் பிறகு மழையால் சுமார் 50 நிமிடம் பாதிப்புக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து அதிதி அசோக் (269 புள்ளிகள்) மேலும் ஒரு இடம் சரிந்து பதக்க வாய்ப்பை இழந்ததுடன் 4-வது இடம் பெற்றார். மழையால் கடைசி சுற்று முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருந்தால் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்று இருப்பார். அந்த அதிர்ஷ்டம் அவருக்கு கைகூடவில்லை.

கோல்ப் விளையாட்டை பொறுத்தமட்டில் குறைவான வாய்ப்புகளில் பந்தை குழிக்குள் தள்ளி குறைந்த புள்ளிகள் பெறுபவர்களே வெற்றி பெற முடியும். கடைசி சுற்று முடிவில் அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா 267 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பான் வீராங்கனை மோனி இனாமி (268 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், நியூசிலாந்து வீராங்கனை லிதியா (268 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். ஒலிம்பிக்கில் கோல்ப் போட்டி 1900, 1904, 2016, 2020 ஆகிய 4 முறை மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவை சேர்ந்த 23 வயதான அதிதி அசோக் உலக தரவரிசையில் 200-வது இடத்தில் இருந்தாலும் 4-வது இடத்தை பிடித்து ஆச்சரியம் அளித்தார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் 41-வது இடம் பெற்று இருந்த அவர் மலைக்க வைக்கும் அளவுக்கு முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒலிம்பிக் கோல்ப்பில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடு இதுவாகும். மற்றொரு இந்திய வீராங்கனை தீக்‌ஷா தாகர் 50-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அதிதி அசோக் கூறுகையில், ‘இந்த போட்டியில் எனது 100 சதவீத திறனை வெளிப்படுத்தினேன். மற்ற போட்டிகளில் 4-வது இடம் கிடைத்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன். ஆனால் இது ஒலிம்பிக் என்பதால் 4-வது இடத்தை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது’ என்றார்.

தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் கோல்ப் ஆட்டத்தை இந்தியர்கள் பலரையும் பார்க்க தூண்டிய அதிதி அசோக்குக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், ‘டோக்கியோ ஒலிம்பிக்கில் உங்களது அற்புதமான திறனை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் பதக்கத்தை தவறவிட்டாலும், கோல்ப்பில் எல்லா இந்தியர்களையும் விட அதிக தூரத்துக்கு சென்றுள்ளீர்கள். உங்களது வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story