‘90 மீட்டர் தூரம் ஈட்டி எறிவதே இலக்கு’ ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா பேட்டி


‘90 மீட்டர் தூரம் ஈட்டி எறிவதே இலக்கு’ ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா பேட்டி
x
தினத்தந்தி 8 Aug 2021 6:50 PM GMT (Updated: 8 Aug 2021 6:50 PM GMT)

ஈட்டி எறிதலில் 90 மீட்டர் தூரத்தை கடப்பதே அடுத்த இலக்கு என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். 121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் இவர் தான்.

‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து பரிசுகள் குவிகிறது. மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் மூலம் இதுவரை ரூ.15 கோடி பரிசுத்தொகை அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இன்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஓராண்டுக்கு எத்தனை முறை வேண்டுமெனாலும் விமானத்தில் இலவசமாக பயணிக்கும் சலுகையை அறிவித்துள்ளது. பிரபல கார் நிறுவனம் சொகுசு கார் வழங்குவதாக கூறியுள்ளது.

அடுத்த இலக்கு

அரியானாவைச் சேர்ந்த 23 வயதான நீரஜ் சோப்ரா தனது விளையாட்டு வாழ்க்கையில் அதிகபட்சமாக 88.07 மீட்டர் தூரம் ஈட்டி வீசியிருக்கிறார். இதை விட அதிக தூரம் வீசுவதே லட்சியம் என்று தற்போது கூறியுள்ளார். தங்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ரா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டோக்கியோ சென்றதில் இருந்தே நான் சரியாக தூங்கவில்லை. நேற்று தான் (நேற்று முன்தினம்) நிம்மதியாக தூங்கினேன். அதுவும் களைப்பாக இருந்ததால் அயர்ந்து தூங்கி விட்டேன். பதக்கத்தை தலையணை அருகில் வைத்திருந்தேன்.

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் ஏற்கனவே பட்டம் வென்று இருக்கிறேன். இனி சீனியர் உலக சாம்பியன்ஷிப்பில் சாதிக்க முயற்சிப்பேன். 2019-ம்ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக நான் நன்றாக தயாராகி வந்தேன். ஆனால் காயத்தால் அதில் பங்கேற்க இயலாமல் போய் விட்டது. அடுத்த உலக சாம்பியன்ஷிப்பில் (2022-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கிறது) பதக்கம் வெல்ல முயற்சிபேன்.

ஈட்டி எறிதல் மிகவும் தொழில்நுட்பம் நிறைந்த விளையாட்டு. போட்டிக்குரிய தினத்தில் பார்மில் இருப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். 90 மீட்டர் தூரத்திற்கு மேல் ஈட்டி எறிவதே எனது அடுத்த இலக்காகும்.

ஜெர்மனி வீரர் குறித்து...

பதக்கம் வெல்லும் வாய்ப்பில் இருந்த ஜெர்மனி வீரர் ஜோகனஸ் வெட்டர் குறித்து கேட்கிறீர்கள். ஏனோ அவர் தடுமாறி விட்டார். இதற்கு காரணம் நெருக்கடியா அல்லது ஒலிம்பிக்குக்கு முன்பாக தொடர்ந்து அதிகமான போட்டிகளில் பங்கேற்றதன் விளைவா ? என்பது தெரியவில்லை. மொத்தத்தில் அவரது ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா என்னை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று ஜோகனஸ் வெட்டர் ஒரு பேட்டியில் கூறியிருந்ததை அறிவேன். ஒலிம்பிக்கை பொறுத்தவரை உலக தரவரிசையோ, சாதனை புள்ளிகளோ ஒரு பொருட்டே அல்ல. இன்றைய நாள் எப்படி அமையும் என்பது யாருக்கும் தெரியாது. அவரது கருத்து குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் அவர் மீது நான் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அவருக்கு எனக்கு அருமையான நண்பர்.

இவ்வாறு சோப்ரா கூறினார்.

28 வயதான ஜெர்மனி வீரர் ஜோகனஸ் வெட்டர் தனது தனிப்பட்ட சாதனையாக 97.76 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்திருக்கிறார். கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் மாதத்திற்குள் 7 முறை 90 மீட்டர் தூரத்திற்கு மேல் ஈட்டியை பறக்க விட்டிருக்கிறார்.

அப்படி இருந்தும் ஒலிம்பிக்கில் பரிதாப நிலையாக 82.52 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்து 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

Next Story