ஒலிம்பிக்கில் விதிமுறையை மீறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இடைநீக்கம்


ஒலிம்பிக்கில் விதிமுறையை மீறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இடைநீக்கம்
x
தினத்தந்தி 11 Aug 2021 5:45 AM GMT (Updated: 11 Aug 2021 5:45 AM GMT)

ஒலிம்பிக்கில் விதிமுறையை மீறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அதிரடியாக இடைநீக்கம் செய்து இந்திய மல்யுத்த சம்மேளனம் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி, 

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். ஹங்கேரியில் பயிற்சியை முடித்து விட்டு அங்கிருந்து நேரடியாக டோக்கியோ சென்றிருந்த அவர் ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய வீராங்கனைகளுடன் தங்க மறுத்ததுடன், சக வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவும் மறுப்பு தெரிவித்தார். 

மேலும் போட்டியின் போது இந்திய அணியினருக்குரிய அதிகாரபூர்வ ஸ்பான்சர் சீருடையையும் அணிய முடியாது என்று சொல்லி விட்டார். வீராங்கனைகளுக்குரிய நடத்தை விதிமுறையை மதிக்காமல் செயல்பட்ட வினேஷ் போகத்தை அதிரடியாக இடைநீக்கம் செய்து இந்திய மல்யுத்த சம்மேளனம் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளது. 

அத்துடன் அவரது செயலுக்கு வருகிற 16-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது விளக்கத்துக்கு பிறகு இறுதி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அவர் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க முடியாது என்றும் மல்யுத்த சம்மேளனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற 19 வயது இந்திய வீராங்கனை சோனம் மாலிக் மல்யுத்த சம்மேளனத்தை மதிக்காமல் செயல்பட்டதாக நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கான தனது பாஸ்போர்ட்டை இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் இருந்து நேராக பெறாமல், இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளை அனுப்பி பெற்றதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story