லவ்லினாவுக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித் தொகை - அசாம் அரசு அறிவிப்பு


லவ்லினாவுக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித் தொகை - அசாம் அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2021 2:42 AM GMT (Updated: 13 Aug 2021 2:42 AM GMT)

லவ்லினாவுக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என அசாம் அரசு அறிவித்துள்ளது.

கவுகாத்தி, 

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற அசாமைச் சேர்ந்த இந்திய இளம் வீராங்கனை லவ்லினா நேற்று சொந்த ஊர் திரும்பினார். கவுகாத்தி விமான நிலையத்தில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேரில் சென்று அவரை வரவேற்றார். அதைத் தொடர்ந்து பிற்பகலில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

‘கவுகாத்தியில் உள்ள சாலை ஒன்றுக்கு லவ்லினா பெயர் சூட்டப்படும். 2024-ம் ஆண்டு பாரீசில் நடக்கும் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு அவர் சிறப்பான முறையில் தயாராவதற்கு வசதியாக மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். அவரது சொந்த ஊரான கோலாகாட் மாவட்டத்தில் உள்ள சருபதாரில் ரூ.25 கோடி செலவில் குத்துச்சண்டை அகாடமியுடன் கூடிய விளையாட்டு வளாகம் கட்டப்படும்’ என்று அறிவித்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநில போலீசில் டி.எஸ்.பி.யாக சேரும்படியும் அவருக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் அவரை உலகத்தரம் வாய்ந்த குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய 5 பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கவும் அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Next Story