பாராஒலிம்பிக் வெற்றியாளர்களும் சேர்க்கப்படுவதால் தேசிய விளையாட்டு விருது வழங்குவது தாமதம் ஆகிறது


பாராஒலிம்பிக் வெற்றியாளர்களும் சேர்க்கப்படுவதால் தேசிய விளையாட்டு விருது வழங்குவது தாமதம் ஆகிறது
x
தினத்தந்தி 13 Aug 2021 3:22 AM GMT (Updated: 2021-08-13T08:52:59+05:30)

விரைவில் நடைபெற உள்ள பாராஒலிம்பிக்கில் வெற்றி பெறுவோரையும் தேசிய விளையாட்டு விருதுக்கு பரிசீலிக்க விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனால் விருது வழங்கும் விழா தாமதம் ஆகிறது.

புதுடெல்லி,

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் கேல்ரத்னா, அர்ஜூனா மற்றும் சிறந்த பயிற்சியாளருக்கு துரோணாச்சார்யா, வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான்சந்த் ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதில் கேல் விருதுக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.25 லட்சமும், அர்ஜூனா விருதுக்கு ரூ.15 லட்சமும், மற்ற விருதுகளுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் தனிப்பட்ட முறையிலும் தங்களது விளையாட்டு சங்கங்கள் மூலமும் விளையாட்டு அமைச்சகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பி உள்ளனர். இதற்கான காலக்கெடு ஏற்கனவே இரண்டு முறை நீட்டிப்பு செய்யப்பட்டு கடந்த மாதம் 5-ந்தேதியுடன் நிறைவடைந்தது.

வழக்கமாக தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந்தேதி விளையாட்டு விருதுகளை ஜனாதிபதி வழங்குவார். ஆனால் இந்த முறை விருது விழா தாமதமாகும் என்பது தெரிய வந்துள்ளது.

விருதுக்குரியவர்களை தேர்வு செய்ய விளையாட்டு கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் பாராஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்படுவோரையும் விருதுக்கு தேர்வு செய்ய விரும்புவதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நேற்று தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. பாராஒலிம்பிக்குக்கு இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 54 பேர் கொண்ட வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவை இந்தியா அனுப்புகிறது. 2016-ம் ஆண்டு பாராஒலிம்பிக்கில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றது. இந்த முறை அதைவிட அதிக பதக்கங்களை இந்தியர்கள் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றி வரலாறு படைத்தது. பாராஒலிம்பிக்கிலும் அசத்தும் பட்சத்தில் இந்த முறை விருது பட்டியலில் இவர்களே கணிசமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விருது வழங்கும் விழா ஆன்லைன் வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த தடவையும் இத்தகைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று தெரிகிறது.

Next Story