மீண்டும் களம் திரும்புவது சந்தேகம்தான்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்


மீண்டும் களம் திரும்புவது சந்தேகம்தான்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
x
தினத்தந்தி 14 Aug 2021 12:46 AM GMT (Updated: 14 Aug 2021 12:46 AM GMT)

மீண்டும் களம் திரும்புவது சந்தேகம் தான் என்று இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறியுள்ளார்.

சர்ச்சையில் வினேஷ்
இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் டோக்கியோ ஒலிம்பிக்கில் 53 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியின் போது நடத்தை விதிமுறைகளை மீறிய புகாரில் சிக்கினார். ஒலிம்பிக் கிராமத்தில் சக இந்திய குழுவினருடன் தங்க மறுத்ததுடன், போட்டியின் போது அவர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவும் ஒத்துழைக்கவில்லை. அத்துடன் அவர் இந்திய அணியின் அதிகாரபூர்வ விளம்பர நிறுவன சீருடையை அணிய மறுத்ததும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து மல்யுத்தத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் வருகிற 16-ந்தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க இந்திய மல்யுத்த சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அவர் இன்னும் பதில் அனுப்பவில்லை. இதே போல் விதிமீறல் பிரச்சினையில் சிக்கிய மற்றொரு மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக் தனது விளக்கத்தை அனுப்பி உள்ளார். மீண்டும் இது போன்ற தவறுகளை செய்யமாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான வினேஷ் போகத் மீண்டும் மல்யுத்தத்திற்கு திரும்புவது சந்தேகமே என்று கூறியுள்ளார்.

மனமுடைந்து போனேன்
வினேஷ் அளித்த ஒரு பேட்டியில், ‘நான் மீண்டும் எப்போது மல்யுத்த களம் திரும்புவேன் என்பது எனக்கு தெரியாது. மீண்டும் விளையாடாமல் கூட போகலாம். கடந்த ஒலிம்பிக்கின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அது பற்றி நான் பெரிய அளவில் கவலைப்படவில்லை. சரி செய்து மீண்டும் களம் காணலாம் என்று நம்பினேன். இப்போது உடலில் பிரச்சினை இல்லை. ஆனால் மனதளவில் உண்மையிலேயே மிகவும் உடைந்து போய் விட்டேன். இந்தியாவை பொறுத்தவரை வேகமாக வளர்ந்து வந்தாலும், பதக்கம் வெல்ல முடியாமல் போகும் போது, எல்லாமே முடிந்து போனது மாதிரி தான்.

அமெரிக்கா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் ஒலிம்பிக்கின் போது மனதளவில் போட்டிக்கு தயாராக இல்லை என்று கூறி கடைசி நேரத்தில் களம் இறங்கவில்லை. அவரது செயலை அனைவரும் பாராட்டுகிறார்கள். இதுவே இந்தியாவில் சொல்லி பாருங்கள். போட்டிக்கு நீங்கள் தயாராகவில்லை என்று கூறி விளையாட்டை விட்டே வெளியேற்றி விடுவார்கள்’ என்றார்.

Next Story