இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டனில் டென்மார்க் வீரர் ஆக்சல்சென் ‘சாம்பியன்’


இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டனில் டென்மார்க் வீரர் ஆக்சல்சென் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 28 Nov 2021 11:17 PM GMT (Updated: 28 Nov 2021 11:17 PM GMT)

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் ஆக்சல்சென் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.

பாலி, 

இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-13, 9-21, 21-13 என்ற செட் கணக்கில் லோ கியான் யேவை (சிங்கப்பூர்) தோற்கடித்து மகுடம் சூடினார். அவருக்கு ரூ.45 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. 

இதன் பெண்கள் பிரிவில் தென்கொரியாவின் அன் செ யங் 21-17, 22-20 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான ராட்சனோக் இன்டானோனுக்கு (தாய்லாந்து) அதிர்ச்சி அளித்து பட்டத்தை தட்டிச் சென்றார். 19 வயதான அன் செ யங் கடந்த வாரம் இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் போட்டியிலும் கோப்பையை வென்றிருந்தார். இந்த தொடரில், இந்தியர்கள் யாரும் அரைஇறுதியை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இதே இடத்தில் உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டன் போட்டி வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடக்கிறது. இதில் டாப்-8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென் ஆகியோர் கவுரவமிக்க இந்த போட்டியில் களம் காண உள்ளனர்.

Next Story