ஆசிய, காமன்வெல்த் போட்டிகளை தவற விடுகிறார் சாய்னா


ஆசிய, காமன்வெல்த் போட்டிகளை தவற விடுகிறார் சாய்னா
x
தினத்தந்தி 13 April 2022 1:55 AM GMT (Updated: 13 April 2022 1:55 AM GMT)

சர்வதேச போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணியை தேர்வு செய்யும் போட்டியில் சாய்னா நேவால் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி, 

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரையும், 19-வது ஆசிய விளையாட்டு சீனாவில் செப்டம்பர் 14-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையும் நடக்கிறது. தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் மே 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த 3 முக்கியமான போட்டிகளுக்கான இந்திய பேட்மிண்டன் அணியை தேர்வு செய்வதற்குரிய போட்டிகள் டெல்லியில் வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி நடக்கிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் வெளியிடப்பட்ட உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இருப்பவர்கள் இந்திய அணிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள் என்றும், தரவரிசையில் 16 முதல் 50 இடங்களுக்குள் இருப்பவர்கள் தகுதி போட்டியில் தங்களது திறமையை நிரூபித்து தான் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

2010 மற்றும் 2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் தற்போது பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கிறார். இதனால் அவர் நேரடியாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாது. அவர் இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் நடத்தும் தகுதி போட்டியில் விளையாடி தான் அணிக்கு தகுதி பெற முடியும்.

இந்த நிலையில் ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக நடத்தப்படும் தகுதி தேர்வு போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று 32 வயதான சாய்னா இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்துக்கு தெரிவித்து இருக்கிறார். 

இதனால் அவர் ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை தவறவிடுவது உறுதியாகி இருக்கிறது. அடிக்கடி காயம் மற்றும் பார்ம் இல்லாமல் தவிக்கும் சாய்னா 2021-ம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்தவொரு சர்வதேச போட்டியிலும் அரைஇறுதியை தாண்டியதில்லை. சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் தொடக்க சுற்றுகளிலேயே நடையை கட்டினார். எனவே தான் அவர் தகுதி சுற்று போட்டியை புறக்கணிக்க முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story