மாநில கூடைப்பந்து போட்டியில் சென்னை அணிகள் சாம்பியன்


மாநில கூடைப்பந்து போட்டியில் சென்னை அணிகள் சாம்பியன்
x
தினத்தந்தி 16 April 2022 3:26 PM GMT (Updated: 2022-04-16T20:56:44+05:30)

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை அணிகள் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

தேனி:

தேனி எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் 3-வது ஆண்டு மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள், தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. 

இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகள், பெண்கள் பிரிவில் 8 அணிகள் என மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் சென்னை சத்தியபாமா கல்லூரி அணியும், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. பெண்கள் பிரிவில் சென்னை எம்.ஓ.பி. வைஸ்ணவா கல்லூரி அணியும், சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. 

இந்நிலையில் ஆண்கள், பெண்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டிகள் இன்று நடந்தன. ஆண்களுக்கான பிரிவில் 71:61 என்ற புள்ளி கணக்கில் சத்தியபாமா அணியை வீழ்த்தி ஜேப்பியார் கல்லூரி அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் 61:45 என்ற புள்ளி கணக்கில் எம்.ஓ.பி. வைஸ்ணவா கல்லூரி அணியை வீழ்த்தி எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி வெற்றி பெற்றது. 

பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதலிடம் பிடித்து சாம்பியன் அணிகள் உள்பட முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுக்கோப்பை மற்றும் பரிசுத்தொகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வழங்கினார். 

விழாவில், எல்.எஸ். மில்ஸ் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் அஸ்வின் நந்தா, தேனி நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன், போட்டி ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story