தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணிகள் தோல்வி


தாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணிகள் தோல்வி
x
தினத்தந்தி 11 May 2022 8:12 PM GMT (Updated: 11 May 2022 8:12 PM GMT)

லீக் சுற்று முடிவில் தென் கொரியா 3 வெற்றிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது.

பாங்காக்,

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இதில் பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை எதிர்கொண்டது. ஒருதலைபட்சமாக அமைந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் சரண் அடைந்தது. 

இதன் ஒற்றையர் ஆட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 15-21, 14-21 என்ற நேர்செட்டில் தென் கொரியாவின் அன் செயோங்கிடம் வீழ்ந்தார். லீக் சுற்று முடிவில் தென் கொரியா 3 வெற்றிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. முதல் 2 லீக் ஆட்டங்களில் கனடா, அமெரிக்கா அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி இருந்த இந்திய அணி தனது பிரிவில் 2-வது இடத்துடன் கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. 

இன்று நடைபெறும் கால்இறுதியில் இந்திய அணி, தாய்லாந்துடன் மோதுகிறது. இதில் ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று சீன தைபேயை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் சீன தைபேயிடம் போராடி தோல்வி கண்டது. லீக் சுற்று முடிவில் சீன தைபே (3 வெற்றி) முதலிடமும், இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறின.

Next Story