காமன்வெல்த் விளையாட்டு தகுதி போட்டியில் நடுவரை தாக்கிய மல்யுத்த வீரருக்கு ஆயுட்கால தடை


காமன்வெல்த் விளையாட்டு தகுதி போட்டியில் நடுவரை தாக்கிய மல்யுத்த வீரருக்கு ஆயுட்கால தடை
x
தினத்தந்தி 17 May 2022 10:25 PM GMT (Updated: 17 May 2022 10:25 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு தகுதி போட்டியில் நடுவரை தாக்கிய மல்யுத்த வீரருக்கு ஆயுட்கால தடை விதித்து இந்திய மல்யுத்த சம்மேளனம் உத்தரவு.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் மல்யுத்த அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் 125 கிலோ எடைப்பிரிவில் விமானப்படை வீரர் சதேந்தர் மாலிக், மொஹித் தாஹியாவுடன் மோதினார். ஆட்டம் முடிய 18 வினாடிகள் இருக்கையில் சதேந்தர் மாலிக் 3-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தார். அந்த சமயத்தில் மொஹித், சதேந்தரை மடக்கி களத்தை விட்டு வெளியே தள்ளினார். அதற்கு நடுவர் வீரேந்தர் மாலிக் ஒரு புள்ளி மட்டுமே வழங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மொஹித் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தார். இந்த சர்ச்சை குறித்து டெலிவிஷன் ரீப்பிளேயை ஆய்வு செய்த சீனியர் நடுவர் ஜக்பிர் சிங், மொஹித்துக்கு 3 புள்ளிகள் வழங்கி தீர்ப்பளித்தார். முடிவில் இருவரும் 3-3 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தாலும், போட்டியின் கடைசியில் புள்ளி எடுத்தவர் என்ற முறையில் மொஹித் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த சதேந்தர் மாலிக் அங்கு நடந்த போட்டியில் நடுவராக பணியாற்றி கொண்டிருந்த ஜக்பிர் சிங்கை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கினார். இதனால் நிலைகுலைந்த நடுவர் மைதானத்தில் விழுந்தார். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றது. இந்திய மல்யுத்த சம்மேளன அதிகாரிகள் சதேந்தர் மாலிக்கை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். இந்த எதிர்பாராத சம்பவம் நடந்த போது இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மேடையில் இருந்தார். சதேந்தர் மாலிக்கின் அத்துமீறிய செயலை நேரில் பார்த்த பிரிஜ் பூஷன் சரண் சிங் அவருக்கு ஆயுட்கால தடை விதிக்க உத்தரவிட்டார். 

இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், ‘நாங்கள் சதேந்தருக்கு ஆயுட்கால தடை விதித்துள்ளோம். இந்த முடிவை தலைவர் எடுத்தார்’ என்றார்.


Next Story