அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ்- ஸ்டீபன்ஸ் வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ்- ஸ்டீபன்ஸ் வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம்
x
தினத்தந்தி 8 Sep 2017 10:30 PM GMT (Updated: 8 Sep 2017 7:08 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிசில், அமெரிக்க வீராங்கனைகள் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிசில், அமெரிக்க வீராங்கனைகள் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இருவரும் தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்காக நாளை அதிகாலை மல்லுகட்ட இருக்கிறார்கள்.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டங்கள் அரங்கேறின.

36 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு 4 அமெரிக்க மங்கைகள் அடியெடுத்து வைத்ததால் உள்ளூர் ரசிகர்கள் உற்சாகமுடன் ஆட்டங்களை கண்டுகளித்தனர்.

ஒரு ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ், 83-ம் நிலை வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார். அனுபவம் வாய்ந்த வீனஸ் வில்லியம்ஸ் ஆதிக்கம் செலுத்துவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் ‘இளம் புயல்’ ஸ்டீபன்சின் சீற்றத்துக்கு பணிந்து விட்டார். 2 மணி 7 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-1, 0-6, 7-5 என்ற செட் கணக்கில் வீனசுக்கு அதிர்ச்சி அளித்து, கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு எதிராளிக்கு புள்ளிகளை தாரைவார்க்கும் தானாக செய்யக்கூடிய தவறுகளை வீனஸ் 51 முறை செய்தார். சொல்லப்போனால் ஸ்டீபன்சை விட ஒரு மடங்கு அதிகமாக இழைத்த தவறுகள், 37 வயதான வீனசுக்கு பெரும் பின்னடைவாகிப்போனது.

24 வயதான ஸ்டீபன்ஸ், இடதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக 11 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் தான் மீண்டும் களம் திரும்பினார். அதன் பிறகு எழுச்சி கண்டு வரும் அவர் அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று பிரமிக்க வைத்திருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் அவர் தரவரிசையில் 22-வது இடத்தை பிடிக்கிறார். பட்டத்தை வென்றால் 15-வது இடம் வரை முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 16-வது இடம் வகிக்கும் மேடிசன் கீஸ் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவர் கோகோ வன்டேவெஜை பந்தாடியதுடன், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக இறுதிசுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் வெறும் 65 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

மேடிசன் கீசும், ஸ்டீபன்சும் இதற்கு முன்பு அமெரிக்க ஓபனில் 4-வது சுற்றை கூட தாண்டியதில்லை. 2002-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்தில் இரு அமெரிக்கர்கள் மோத இருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

மேடிசன்-ஸ்டீபன்ஸ் மோதும் மகுடத்திற்கான இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

22 வயதான மேடிசன் கீஸ் ஏற்கனவே ஸ்டீபன்சுக்கு எதிராக ஒரு முறை மோதி அதில் தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேடிசன் கீஸ் வாகை சூடினால், தரவரிசையில் 9-வது இடத்தை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

Next Story