டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார், நடால் சாம்பியன் பட்டத்துக்கு ஆண்டர்சனுடன் மோதுகிறார் + "||" + American Open Tennis

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார், நடால் சாம்பியன் பட்டத்துக்கு ஆண்டர்சனுடன் மோதுகிறார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார், நடால்
சாம்பியன் பட்டத்துக்கு ஆண்டர்சனுடன் மோதுகிறார்
அமெரிக்க ஓபன் டென்னிசில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சாம்பியன் பட்டத்துக்கான ஆட்டத்தில் அவர் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்துவிட்ட இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், முன்னாள் சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 28-ம் நிலை வீரரான ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவுடன் (அர்ஜென்டினா) மோதினார்.
கால்இறுதியில் பெடரருக்கு அதிர்ச்சி அளித்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் புகுந்த டெல் போட்ரோ முதல் செட்டை வசப்படுத்தி, நடாலுக்கும் நெருக்கடி கொடுத்தார்.

ஆனால் அதன் பிறகு சுதாரித்துக்கொண்ட ‘இடக்கை புயல்’ ரபெல் நடால் ஆக்ரோஷமான ஷாட்டுகளை அடித்து டெல்போட்ரோவை திணறடித்தார். கடைசி மூன்று செட்டுகளில் டெல் போட்ரோவால் நடாலுக்கு துளியும் ஈடுகொடுக்க முடியவில்லை.

2 மணி 30 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் ரபெல் நடால் 4-6, 6-0, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் டெல்போட்ரோவை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 2009-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் இதே அரைஇறுதியில் தான் டெல் போட்ரோ, நடாலை தோற்கடித்து இருந்தார். 8 ஆண்டுகள் கழித்து அதே சுற்றில் நடால் வஞ்சம் தீர்த்து இருக்கிறார். நடால் ஏற்கனவே 2010, 2013-ம ஆண்டுகளில் அமெரிக்க ஓபனை வென்றிருப்பது நினைவு கூரத்தக்கது.

31 வயதான ரபெல் நடால் கூறும் போது, ‘சிறந்த வீரருக்கு எதிரான இந்த வெற்றி மிகவும் முக்கியமானதாகும். அவர் கடினமான எதிராளி என்பதை அறிவேன். வெற்றிக்கு தேவை யான அளவுக்கு சரியான லெவலில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடினமான தருணங்களை சந்தித்த சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு எனக்கு உணர்வு பூர்வமாகவும், வியப்புக்குரிய வகையிலும் அமைந்திருக்கிறது’ என்றார்.

முன்னதாக நடந்த மற்றொரு அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பாப்லோ காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) சாய்த்து, கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவர் 2 மணி 55 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. மணிக்கு அதிகபட்சமாக 135 மைல்வேகம் வரை சர்வீஸ் போட்ட, கெவின் ஆண்டர்சனுக்கு 22 ‘ஏஸ்’ சர்வீஸ்கள் வீசியது வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட கெவின் ஆண்டர்சன் வெற்றி உறுதியானதும், ஸ்டேடியத்தில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சி உதவியாளர்கள் குழுவினரை கட்டிப்பிடித்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

தென்ஆப்பிரிக்காவில் பிறந்த ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிசுற்றை எட்டுவது 33 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1984-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் கரென் ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

1973-ம் ஆண்டு ஏ.டி.பி. தரவரிசை அறிமுகம் ஆன பிறகு, அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற குறைந்த தரவரிசை கொண்ட வீரர் ஆண்டர்சன் தான். இவர் தற்போது உலக தரவரிசையில் 32-வது இடம் வகிக்கிறார். 31 வயதான கெவின் ஆண்டர்சன் கூறுகையில், ‘மிக கடினமாக உழைத்து தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இது ஒரு நீண்ட பயணம். இதில் சில கடின காலக்கட்டங்களும் உண்டு’ என்றார்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ரபெல் நடாலும், கெவின் ஆண்டர்சனும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இருவரும் ஏற்கனவே சந்தித்த 4 ஆட்டங்களிலும் நடாலே வெற்றி கண்டிருப்பதால் இந்த முறையும் அவர் ஆதிக்கம் செலுத்த பிரகாசமான வாய்ப்பு உள்ளது. நடால் வாகை சூடினால், அது அவரது 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வீரருக்கு ரூ.23½ கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.11½ கோடியும் பிரிசாக வழங்கப்படும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ஜீன் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து)- ஹோரியா டெகாவ் (ருமேனியா) ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பெலிசியானோ லோப்ஸ்-மார்க் லோப்ஸ் (ஸ்பெயின்) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இவர்கள் அமெரிக்க ஓபன் இரட்டையர் பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.