டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் ‘சாம்பியன்’ + "||" + American Open Tennis

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் ‘சாம்பியன்’

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க இளம் வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சக நாட்டவரான மேடிசன் கீசை நேர் செட்டில் தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்துடன் கூடிய அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த 2 வார காலமாக நியூயார்க் நகரில் நடந்து வந்தது.

இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 83-ம் நிலை வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்சும், 16-ம் நிலை நட்சத்திரம் மேடிசன் கீசும் பலப்பரீட்சையில் இறங்கினர். நெருங்கிய தோழிகளான இவர்கள் இருவருக்கும் இது தான் முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்று என்பதால் ஆரம்பத்தில் ஒரு வித பதற்றத்துடன் விளையாடினர். அதே சமயம் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் மல்லுகட்டியதால், உள்ளூர் ரசிகர்கள் இருவரையும் உற்சாகப்படுத்தினர்.

விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கத்தில் இருந்தே ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். மேடிசன் கீஸ் இடைவிடாது ஆக்ரோஷமாக ஆடினாலும் நிறைய ஷாட்டுகளை லைனுக்கு வெளியே அடித்து எதிராளிக்கு புள்ளிகளை வாரி வழங்கினார். இதனால் ஸ்டீபன்சின் கை வேகமாக ஓங்கியது. மேடிசன் கீசின் இரண்டு சர்வீசை முறியடித்து முதல் செட்டை தனதாக்கிய ஸ்டீபன்ஸ், 2-வது செட்டில் மேடிசன் கீசை முழுமையாக மிரள வைத்தார். இந்த செட்டில் மேடிசனால் ஒரு கேமை கூட வசப்படுத்த முடியவில்லை.

61 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மேடிசன் கீசை தோற்கடித்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சிமுகர்ந்தார். பந்தை வலுவாக வெளியே அடித்து விடும் தானாகச் செய்யக்கூடிய தவறுகளை மேடிசன் கீஸ் 30 முறை செய்ததால் சரிவை தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

வாகை சூடிய 24 வயதான ஸ்லோன் ஸ்டீபன்சுக்கு ரூ.23½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த மேடிசன் கீசுக்கு ரூ.11½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. வெற்றிக்கனியை பறித்ததும் தனது தாயாரை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்ட ஸ்டீபன்ஸ் கூறுகையில், ‘மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. உண்மையிலேயே இப்போது நான் தான் அமெரிக்க ஓபன் சாம்பியன் என்பதை உணர்வதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இது கனவு போன்று உள்ளது.

காலில் ஏற்பட்ட காயத்துக்கு கடந்த ஜனவரி மாதம் ஆபரேஷன் செய்தேன். அதன் பிறகு ‘நீ தான் அமெரிக்க ஓபனை வெல்வாய்’ என்று யாராவது சொல்லியிருந்தால் அதற்கு சாத்தியமே இல்லை என்று தான் பதில் கூறியிருப்பேன். எனது டென்னிஸ் பயணம் நம்ப முடியாத வகையில் உள்ளது. எனது சிறந்த, நெருங்கிய தோழிகளில் மேடிசன் கீசும் ஒருவர். அவருக்காக வருத்தப்பட வேண்டியதில்லை. இது ஒன்றும் மோசமான நிலைமை இல்லை. இறுதிப்போட்டிக்கு வந்ததே பெரிய விஷயம். நிச்சயம் அவர் நன்றாகத் தான் இருப்பார்’ என்றார்.

மேலும் ஸ்டீபன்ஸ் கூறுகையில், ‘எனது டென்னிஸ் வாழ்க்கையில் எனது தாயாருக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் எல்லா வகையிலும் பக்கபலமாக இருக்கிறார். நான் விளையாடிய ஆட்டத்தை அவர் நேரில் பார்க்க வந்தது இது தான் முதல்தடவை’ என்றார்.

இடது காலில் ஏற்பட்ட காயத்தால் ஸ்டீபன்ஸ் 11 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் தான் மீண்டும் களம் திரும்பினார். அதன் பிறகு யாரும் எதிர்பாரா வண்ணம் அவர் பெற்றிருக்கும் வெற்றிகளும், எழுச்சியும் அனைவரது புருவத்தையும் உயர வைத்திருக்கிறது. இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அவர் 17-வது இடத்தை பிடிக்கிறார்.

தோல்வி கண்ட 22 வயதான மேடிசன் கீஸ் கூறுகையில், ‘எனக்கு மிகவும் பிடித்தமான வீராங்கனைகளில் ஸ்டீபன்சும் ஒருவர். இருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிவோம். நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள் வோம். அவருக்கு எதிராக விளையாடியது சிறப்பு வாய்ந்தது. எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாதது மிகுந்த ஏமாற்றம் அளித்தது’ என்றார்.

கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து மங்கை மார்ட்டினா ஹிங்கிஸ், இங்கிலாந்து வீரர் ஜெமி முர்ரேவுடன் கைகோர்த்து, மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து)- சான் ஹாவ் சிங் (சீனத்தைபே) ஜோடியை எதிர்கொண்டார். திரிலிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் ஹிங்கிஸ்- ஜெமி முர்ரே ஜோடி 6-1, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கியது. இவர்கள் கூட்டாக ரூ.95 லட்சத்தை பரிசாக பெற்றனர்.

5 ஒற்றையர், 12 பெண்கள் இரட்டையர், 7 கலப்பு இரட்டையர் என்று இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஹிங்கிஸ் அறுவடை செய்திருக்கிறார். 36 வயதான ஹிங்கிசிடம், ஜெமி முர்ரேவுடன் மீண்டும் இணைந்து விளையாடுவீர்களா என்று கேட்ட போது, ‘நான் தொடர்ந்து விளையாடினால் நிச்சயம் அவருடன் ஜோடி சேர்ந்து ஆடுவேன்’ என்று பதில் அளித்தார். அவரது கருத்தை வைத்து பார்க்கும் போது விரைவில் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.