டென்னிஸ்

தரவரிசையில் பெடரர் முன்னேற்றம் + "||" + Federer lifts self in intl ranking

தரவரிசையில் பெடரர் முன்னேற்றம்

தரவரிசையில் பெடரர் முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் முடிந்ததை தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால் முதலிடத்தில் நீடிக்கிறார். கால்இறுதியில் தோல்வியை தழுவிய ரோஜர் பெடரர் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். காயம் காரணமாக கடைசி நேரத்தில் அமெரிக்க ஓபனில் ஆடுவதை தவிர்த்த இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஒரு இடம் இறங்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 4 முதல் 8-வது இடங்களில் முறையே அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), நோவக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் திம் (ஆஸ்திரியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆகியோர் உள்ளனர். இறுதி ஆட்டத்தில் தோற்ற கெவின் ஆண்டர்சன் மளமளவென 17 இடங்கள் ஏற்றம் கண்டு 15-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ராம்குமார் 154-வது இடத்திலும், யுகி பாம்ப்ரி 157-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் 

தரவரிசையில் ஸ்பெயினின் கார்பின் முகுருஜா முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியிருக்கிறார். 2-வது இடத்தில் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 3-வது இடத்தில் எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) உள்ளனர். இதுவரை முதலிடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 4-வது இடத்துக்கு பின்தங்கினார். அமெரிக்க ஓபன் புதிய சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 83-வது இடத்தில் இருந்து 17-வது இடத்துக்கு வந்துள்ளார்.

பெண்கள் இரட்டையர் 

தரவரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஒரு இடம் உயர்ந்து 8-வது இடம் வகிக்கிறார். ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் ரோகன் போபண்ணா 19-வது இடத்திலும், புராவ் ராஜா 56-வது இடத்திலும், லியாண்டர் பெயஸ் 62-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்கள் யார்-யார்?

‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன்-1, பிரெஞ்ச் ஓபன்-10, விம்பிள்டன்-2, அமெரிக்க ஓபன்-3 என்று மொத்தம் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறார். அதிக கிராண்ட்ஸ்லாம் ருசித்த முதல் 5 வீரர்கள் விவரம் வருமாறு:-

1. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)-19
2. ரபெல் நடால் (ஸ்பெயின்)-16
3. பீட்சாம்ப்ராஸ் (அமெரிக்கா)-14
4. ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா)-12
5. ஜோகோவிச் (செர்பியா)-12